சமயம் மற்றும் கலாச்சார மாண்பினை நெறிப்படுத்தும் ‘மை மாணவர்’ திட்டம் மீண்டும் மலர்கிறது

ஜார்ச்டவுன் -” சமயம் என்பது ஒரு மனிதனை நல்வழியில் வாழ வழிகாட்டும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது. சமய நெறிகளை முறையாகக் கற்கும் மாணவன் சிறந்த ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவப் பண்புகள் மிக்கவனாக உருமாற்றம் காண்கிறான்,” என புக்கிட் பெண்டேரா இந்து சங்கப் பேரவையின் தலைவர் விவேக நாயகன் தர்மன் ‘மை மாணவர்‘ (MyManavar) பிரியாவிடை விழாவில் கலந்து கொண்டு வரவேற்புரை வழங்கும் போது இவ்வாறு கூறினார்.

சமயம் மற்றும் கலாச்சார வகுப்பு (மை மாணவர்) திட்டத்தில் தமிழ்ப்பள்ளி மட்டுமின்றி
தேசியப்ப்பள்ளி மற்றும் சீனப்பள்ளிகளில் பயிலும் நம் இந்திய மாணவர்களை அடையாளம் காணப்பட்டு பங்கு கொள்ள அழைக்கப்படுகின்றனர். இதன் மூலம் நம் மாணவர்கள் சமயம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நன்கு அறிய முடியும் என தர்மன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு (2019) இத்திட்டத்தில் தீவுப்பகுதியைச் சேர்ந்த நான்கு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ( இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளி, அஸாத் தமிழ்ப்பள்ளி, ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி, சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி) கலந்து கொண்ட வேளையில் இவ்வாண்டு பிற மூன்று தமிழ்ப்பள்ளிகளும் இப்பட்டியலில் இடம்பெறும் என எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார்.

‘மை மாணவர்‘ திட்டம் சமயப் போதனை, அறிவியல் முறையில் நிரூபிக்கப்பட்ட நமது இந்து சமயக் கூறுகளுக்கான  விளக்கம் அளித்தல் மற்றும் கலை சார்ந்த நடவடிக்கைகள் என மூன்று பிரிவுவாக வழிநடத்தப்படுகிறது.

புக்கிட் பெண்டெரா பேரவையின் கீழ் கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மை மாணவர் திட்டத்தில் 75 மாணவர்கள் பங்குப் பெற்று நற்சான்றிதழ் பெற்றுக் கொண்டனர்.

இந்தப் பிரியாவிடை விழாவில் மாணவர்கள் பாரம்பரிய நடனம், தற்காப்பு கலை, மேடை பேச்சு ஆகிய படைப்புகளைப் படைத்து வருகையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.

ஆறு மாத கால பயிற்சி வகுப்பில் சிறந்த படைப்பற்றலை வழங்கிய மாணவர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அவ்வகையில் சிறந்த முன்மாதிரி விருதை ஹிரென் ஜெகதேசன், லோஷினி ஜானகி ; சிறந்த அகஸ்தியர் விருதை அகிலன், விக்னேஸ்வரி ;சிறந்த அபிமன்யு விருதை த.குஹான் , சி.தர்ஷிகா பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சிக்குழு உறுப்பினர் சாய்ரில் கீர் ஜொஹரி பிரதிநிதியாக ஜேம்ஸ் நாராஸ்,
பினாங்கு இந்து சங்க கல்விப்பிரிவுத் தலைவர் செளந்தரராஜன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முதலாம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து இத்திட்டம் மீண்டும் வருகின்ற ஜனவரி மாதம் 15-ஆம் நாள் தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமை காலை மணி  8.30 முதல் 11.00 மணி வரை இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளி வளாகத்தில் இனிதே நடைபெறும். இத்திட்டத்தில் 7 முதல் 15 வயது மதிக்கத்தக்க மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

மேல் விபரங்களுக்கு
016-4948281 / 016-4889422 என்ற எண்களைத் தொடர்புக் கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் முகவரி
[email protected] அல்லது அகப்பக்கத்தை
https://www.facebook.com/mhsbbceducationbureau/ அனுகலாம்.