சாய் லெங் பார்க் பொதுச் சந்தை 200 வருகையாளர்களுக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை

Admin

பிறை – தாமான் சாய் லெங் பார்க் பொதுச் சந்தைக்கு வருகையளித்த  200 பேர்களுக்கு கோவிட்-19 இலவச  பரிசோதனையை நடத்த பிறை சட்டமன்ற அலுவலகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

அண்மையில், இந்த சந்தையைச் சேர்ந்த 11 வியாபாரிகள் கோவிட்-19 தொற்றுக்கு இலக்கானதை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார். 

“இந்த பரிசோதனை ஜூன்,18 முதல் 20 வரை சாய் லெங் பார்க் பொதுச் சந்தைக்கு வருகையளித்த குறிப்பாக பி40 குழுவினருக்கு  முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

“இங்குள்ள ஒரு தனியார் கிளினிக் மருத்துவர் ஜூன்,18 முதல் 20 வரை பொதுச் சந்தைக்கு வருகையளித்த 100 பேர்களுக்கு 100 ‘கிட்’ மற்றும் இலவச கோவிட்-19 பரிசோதனை  செய்ய  இணக்கம் தெரிவித்துள்ளார். 

“பிறை சட்டமன்ற அலுவலகம் சார்பில் மேலும் 100 இலவச கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் செயல்படுத்த தேவைப்படும் அனைத்து செலவினத்தையும் பிறை சட்டமன்ற அலுவலகம் ஏற்கும்,” என இராசாமி கூறினார்.

“இந்த உரிய நேரத்தில் பிறை வட்டார பொது மக்களுக்கு உதவிபுரியும் கிளினிக்(கே.எஸ்) வோங் பங்களிப்பு பாராட்டக்குரியது,” என செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர்களான, டேவிட் மார்ஷல் மற்றும் ஜேசன் ராஜ் மற்றும் பிறை சட்டமன்ற அலுவலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், இந்த பொதுச் சந்தைக்கு வருகையளித்தவர்களில் கோவிட்-19 நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கொண்டோர்  உடனடியாக அருகிலுள்ள சுகாதார கிளினிக்கில் பரிசோதனை மேற்கொள்ளுமாறு இராமசாமி கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, மத்திய செபராங் பிறை மாவட்ட சுகாதார அலுவலகம் (பி.கே.டி) 11 வியாபாரிகள் கோவிட்-19 தொற்றுக்கு ஆளானதை தொடர்ந்து சாய் லெங் பார்க் பொதுச் சந்தையை  ஜூன் 19 முதல் 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது. 

இந்த சந்ததையை மூட உத்தரவிட்டதில் 143 வியாபாரிகளும், பொதுச் சந்தை கட்டிடத்திற்கு வெளியே காலைச் சந்தையில் வியாபாரம் செய்யும் 56 வியாபாரிகளும்  உட்படுத்தப்பட்டதாக 
எம்.பி.எஸ்.பி மேயர், டத்தோ ரோசாலி மொஹமட் கூறினார்.

“சாய் லெங் பார்க் பொதுச் சந்தையில் பதிவுச்செய்யப்பட்ட கோவிட்-19  வழக்குடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைத்து வியாபாரிகள் அல்லது  வருகையளித்தவர்கள்
கூடிய விரைவில் மாவட்ட சுகாதார அலுவலகம் மூலம் பரிசோதனை செய்ய தொடர்புகொள்வார்கள்.

“சம்பந்தப்பட்ட தரப்பினர் பரிசோதனைக்கு உடனடியாக வருமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மத்திய செபராங் பிறை  சுகாதார அலுவலகத்தை 04-5397884 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்திப்பு விபரத்தை பெற்றுக்கொள்ள  வேண்டும்,” என்று ஜூன்,21 வெளியிட்ட  ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், கோவிட்-19 பரிசோதனை செய்ய விரும்பும் வியாபாரிகள்  தனியார் கிளினிக்கிலும் அவ்வாறு செய்யலாம். அதன் முடிவுகளை எம்.பி.எஸ்.பி-யிடம்  பதிவு மற்றும் மேலதிக திட்டமிடல் நோக்கங்களுக்காக தெரிவிக்க வேண்டும் என்று ரோசாலி கூறினார்.

“பொதுச் சந்தை மூடப்பட்ட உத்தரவுக்கு இணங்க , வருகின்ற ஜூன்,29  அல்லது மேல் அறிவிப்பு வரும் வரை வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதி இல்லை,” என்று அவர் விளக்கமளித்தார்.