சீக்கிய ஆலய பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு நிதியுதவி

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு 121 ஆண்டுகள் பழமையான பினாங்கு வாடா குருத்வாரா சாஹிப் ஆலயத்திற்கு பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கு உதவும் பொருட்டு ரிம50,000 ஒதுக்கீடு வழங்கியது.

மாநில வீட்டுவசதி, உள்ளாட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில், குருத்வாரா மேம்பாட்டுப் பணிகள் தற்போது முக்கியமான கட்டத்தில் உள்ளது.

“தற்போது முக்கியமான கட்டம் என்று கூறும்போது, ​​ஒப்பந்தக்காரர்கள் இயற்பியல் பணிகளைத் தொடங்க வேண்டிய நேரமாகும்.

“சிமென்ட் பணியின் ஆரம்ப கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன, எனவே இப்போது ‘கிளஸ்டரிங்’ மற்றும் பிற பணிகளைத் தொடங்குகிறது.

“இத்திட்டத்தை செயல்படுத்த பல வருடங்களாக பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றிய ஆலய மேம்பாட்டுத் திட்டக் குழு உறுப்பினர்களுக்கு நன்றித் தெரிவிக்க விரும்புகிறேன். எனவே, நாங்கள் இப்போது ஒரு முக்கியமான மேம்பாட்டுப் பகுதிக்குள் நுழைவதால், இத்திட்டம் நிறைவேறும் வரை அவர்களின் கடின உழைப்பை வரவேற்கிறோம்,” என்று பினாங்கு வாடா குருத்வாரா ஆலயத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஜெக்டிப் கூறினார்.

நாட்டிலே பழமையான ஆலயங்களில் ஒன்றான இந்த குருத்வாரா ஆலய பராமரிப்புப் பணிகள் நிறைவுப் பெற அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்.

“நான் முன்பே குறிப்பிட்டது போல், வருகின்ற அக்டோபர்,8 ஆம் தேதி கொம்தார் தி டோப்பில் நிதித் திரட்டும் பாரம்பரிய விருந்தோம்பல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளோம். இந்நிகழ்ச்சியின் மூலம் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு உதவ ரிம2 மில்லியன் திரட்டத் திட்டமிட்டுள்ளதாக,” ஜெக்டிப் மேலும் விவரித்தார்.

இதற்கிடையில், பினாங்கு வாடா குருத்வாரா சாஹிப் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புத் திட்டத் தலைவர் டத்தோஸ்ரீ மஹிந்தர் சிங் துல்கு கூறுகையில், கோவிட் 19 காரணமாக, இம்மேம்பாட்டுத் திட்டச் செலவு ரிம4 மில்லியனில் இருந்து ரிம5.9 மில்லியனாக உயர்ந்துள்ளது.

“விரைவில் ஏற்பாடு செய்துள்ள இந்த விருந்தோம்பலின் மூலம், அனைவரிடமிருந்தும் அனைத்து ஆதரவையும் பெறுவோம் என்று நம்புகிறோம்,” என்றார்.

இதுவரை ரிம1.1 மில்லியன் வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, பினாங்கு மாநில அரசு இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் அனைத்திற்கும் உரிய கவனம் செலுத்தப்படுவதை தொடர்ந்து உறுதி செய்கிறது. இதுவரை, சீனக் கோயில்கள் (108), இந்து ஆலயங்கள் (54), குருத்வாரா ஆலயங்கள்(10) மற்றும் தேவாலயங்கள் (44) என 216 மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மாநில அரசு RIBI திட்டத்தின் மூலம் ரிம9.04 மில்லியன் செலவிட்டுள்ளது.