அரசு சாரா இயக்கங்களின் சமூகநல திட்டங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வித்திடும் – முதல்வர்

Admin

புக்கிட் தெங்கா- மலேசிய தமிழர் குரல் சமூகநல இயக்கம் பினாங்கு மாநிலம் மட்டுமின்றி நாடு தழுவிய நிலையில் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு குரல் கொடுக்கிறது என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பாராட்டு தெரிவித்தார். 

“தமிழர் குரல் சமூகநல இயக்கத் தலைவர் டேவிட் மார்ஷல் சமூக முன்னேற்றம் குறிப்பாக இந்தியர்களின் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, சமூகநலன் பிரச்சினைகள் தீர்வுக்காண முன்வருதையும் சிறந்த செயலாக கருதுவதாகக் கூறினார். 

“மேலும், டேவிட் மார்ஷல் செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலராக மட்டும் தனது பங்களிப்பு வழங்காமல் மாறாக பல சமூக அடிப்படையிலான அமைப்புகளிலும்
பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகளில் குரல் கொடுத்து தீவிரமாக ஈடுபடுகிறார். 

“உதாரணமாக, பினாங்கு மற்றும் அண்டை மாநிலங்களில் கூட வேலை வாய்ப்புகள், சுகாதாரம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு விவகாரங்கள் தொடர்பான விஷயங்களில் கூட குரல் எழுப்பி அந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுக்காண முன்வந்துள்ளார்,” என தமிழர் குரல் சமூகநல இயக்க நிதித் திரட்டும் விருந்தோம்பல் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இவ்வாறு தெரிவித்தார்.

மாநில முதல்வர், டேவிட் மார்ஷல் தலைமைத்துவத்தை பாராட்டியதோடு இந்த இயக்க முன்முயற்சிக்குத் தொல் கொடுக்கும் வகையில் மாநில அரசு மானியமாக ரிம20,000-ஐ நன்கொடையாக வழங்கினார். 

இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி தமிழர் குரல் இயக்கத்தின் தலைமையகக் கட்டிடம் வாங்க பயன்படுத்தப்படும். 

தாமான் இண்ராவாசே பகுதியில் இருக்கும் இந்த நான்கு மாடிக் கட்டிடம் தமிழர் குரல் இயக்க தலைமையகமாக மட்டுமின்றி சமூக மையமாகச் செயல்படும் என அதன் தலைவர் டேவிட் மார்ஷல் கூறினார். 

இந்த கட்டிடத்தில் சமூகநல திட்டங்களான பட்டறைகள், பிரத்தியேக வகுப்புகள்; கணினி வகுப்புகள் வழி நடத்த இலக்கு கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்திஸ் முனியாண்டி; ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் மொய் லாய்; தமிழர் கழக உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

“இந்த இயக்கம் எதிர்காலத்தில் இந்தியர்களின் சமூகநல  மேம்பாடு மட்டுமின்றி அனைத்து இனத்தவர்களின் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுக்கும் இயக்கமாக திகழ வேண்டும்.

“பினாங்கு மாநில அரசு அனைத்து இனத்தவர்களின் நலன்பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்தும், அதேவேளையில் எந்த இனத்தையும் புறக்கணிக்கவில்லை. பினாங்கு எப்பொழுதும் முன்னெடுத்துச் செல்லும்,” என பேராசிரியர் இராமசாமி சூளுரைத்தார்.