தமிழ்ப்பள்ளிகளில் தொழில்நுட்பம் சார்ந்த கல்விக்கு ஊக்குவிப்பு அவசியம் – பேராசிரியர்

Admin

பிறை – “பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை வழங்க வேண்டும்; இதன் மூலம் இன்றைய மாணவர்கள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள சுலபமாக இருக்கும்”, என ஜாலான் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற யூ.பி.எஸ்.ஆர் (ஆரம்பப் பள்ளி மதிப்பீடு தேர்வு) மாணவர்களுக்கான டிஜித்தல்(தொழில்நுட்பம்) மீள்பார்வை 2019 திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் தமதுரையில் இவ்வாறு பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.

ஜாலான் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கான டிஜித்தல்(தொழில்நுட்பம்) மீள்பார்வை 2019 திட்டத்தில் சுமார் 900 மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர். இத்திட்டத்தை மேலும் 5மாதம் காலத்திற்கு தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என பேராசிரியர் கேட்டுக் கொண்டார். அத்தினத்தன்று தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ‘வெற்றி வியாசம்’ எனும் மீள்பார்வை புத்தகமும் ஆலய நிர்வாகத்தால் எடுத்து வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன், இந்து அறப்பணி வாரிய நிர்வாக தலைவர் டத்தோ இராமசந்திரன், செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல், பினான்கு மாநில தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சிங்காரவேலன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகம் சமயம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்காமல் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இம்மாதிரியான திட்டங்களை வழிநடத்துவதை கண்டு மனதார பாராட்டினார் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி. மேலும், பினாங்கில் உள்ள பிற ஆலயங்களும் ஜாலான் பாரு, முனீஸ்வரர் ஆலயத்தை முன்னோடியாக கொண்டு இம்மாதிரியான தொண்டுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் பினாங்கு மாநில அரசு தெக் டோம், மின்னியல் நூல்நிலையம், அறிவியல் ‘கிளாஸ்தர்’, ஸ்தெம் கல்வி என மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளன  என்றால் மிகையாகாது. தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்தத் திட்டங்கள் அனைத்திலும் தங்களை ஈடுப்படுத்தி கொண்டு தொழில்துறை புரட்சி 4.0 எதிர்கொள்ள தயாராகி கொள்ள வேண்டும் என ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியர் கேட்டுக் கொண்டார்.

மேலும், இந்து அறப்பணி வாரியத்தின் முயற்சியில் மின்னியல் நூல்நிலையம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதையும் தமதுரையில் பேராசிரியர் பஇராமசாமி குறிப்பிட்டார். தொடர்ந்து பிறை வட்டாரத்தில் ‘டிரோன்’ தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது பாராட்டக்குரியதாகும்.