தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சதுரங்கத்தை ஊக்குவிக்கும் தேசிய போட்டி – குமரன்

Admin
fb img 1781091254743

கெபுன் பூங்கா – தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அஸாத் தமிழ்ப்பள்ளியின் அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான தேசிய அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் 2026’ எனும் சதுரங்கப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

fb img 1781091243800

அஸாத் தமிழ்ப்பள்ளி ஏற்பாடு செய்த இப்போட்டி, பினாங்கு மாநில அரசின் ஆதரவுடனும், என்ரிகோஸ் தனியார் நிறுவனம், தீஜேய் சதுரங்க அகாடமி, மலேசிய சதுரங்க கூட்டமைப்பு (MCF) மற்றும் பினாங்கு சதுரங்க சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் சிறப்பாக நடத்தப்பட்டது.

fb img 1781091236717

பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக் குழுவின் தலைவரும், மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ அவர்களின் சார்பில் அக்குழுவின் துணைத் தலைவரும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான குமரன் கிருஷ்ணன் இப்போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

fb img 1781091228529

நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். மாணவர்களின் ஆர்வமிக்க பங்கேற்பும் பெற்றோர்களின் தொடர்ச்சியான ஆதரவும் இந்நிகழ்வின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரிந்தது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குமரன், இப்போட்டியை ஆண்டுதோறும் நடத்தும் வகையில் பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக, பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளையும் உள்ளடக்கிய வருடாந்திர நிகழ்வாக இப்போட்டியை மாற்றும் திட்டம் பரிசீலிக்கப்படும், என்றும் கூறினார்.

இந்தத் திட்டம், மாணவர்களிடமிருந்து கிடைத்த உற்சாகமான வரவேற்பு மற்றும் பெற்றோர்கள் வழங்கிய முழுமையான ஆதரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சதுரங்கம் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல; அது மாணவர்களின் சிந்தனைத் திறன், திட்டமிடும் ஆற்றல் மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் ஒரு சிறந்த கல்வி கருவியாகும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், வாழ்க்கையில் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் முடிவெடுக்கும் திறனை வளர்க்க சதுரங்கம் முக்கியப் பங்காற்றுகிறது, என்றார்.

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய ஏற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.

மேலும், இத்தகைய போட்டிகள் எதிர்காலத்தில் மேலும் பல திறமையான இளம் சதுரங்க வீரர்களை உருவாக்கும் தளமாக அமையும் என்பதுடன், மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் நாட்டின் எதிர்கால மனிதவள மேம்பாட்டிற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என குமரன் நம்பிக்கை தெரிவித்தார்.