குளுகோர் – “மதம் மற்றும் சமூகப் பின்னணி பாராமல் ஸ்ரீ டெலிமா தொகுதியில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மேற்கொள்ளும் அர்த்தமுள்ள முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவேன்.
“மக்களிடையே நிலவும் மத மற்றும் கலாசாரப் பன்முகத்தன்மை சமூகத்தைப் பிரிக்கும் காரணியாக அல்லாமல், சமூகத்தை வளப்படுத்தி மக்களை மேலும் நெருக்கமாக இணைக்கும் வலிமையாகக் கருதப்பட வேண்டும்.

ஸ்ரீ சைவ முன்னீஸ்வரர் ஆலயத்தின் வருடாபிஷேக விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் கோனி டான் ஹூய் பெங் இவ்வாறு கூறினார்.
பல்வேறு சமூகங்களுக்கிடையே உருவாகியுள்ள நல்லிணக்கமும் ஒற்றுமையும் ஸ்ரீ டெலிமாவின் மிகப்பெரிய பலமாகும். இந்த மதிப்புமிக்க பாரம்பரியம் எதிர்கால தலைமுறைகளுக்காகப் போற்றப்பட்டு, கொண்டாடப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும், பல ஆண்டுகளாக உள்ளூர் மக்களுடனான உறவு, ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கும் மக்களுக்கும் இடையிலான வழக்கமான உறவைத் தாண்டியதாகும் என்று சட்டமன்ற உறுப்பினர் கோனி டான் ஹூய் பெங் குறிப்பிட்டார்.

இனம், மதம் மற்றும் கலாசார வேறுபாடுகளைத் தாண்டி உருவான நட்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலான உறவாக அது திகழ்கிறது, என்றார்.
மேலும், ஆலயத்தின் வருடாபிஷேக கொண்டாட்டத்தை முன்னிட்டு ரிம2,000 நிதியுதவியையும் சட்டமன்ற உறுப்பினர் கோனி டான் வழங்கினார்.
இந்த விழாவில், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் அவர்களின் பிரதிநிதியாக பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) கவுன்சிலர் விஸ்வநாதன் கலந்துகொண்டனர்.
ஆலயத்தின் சமய மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் சார்பில் ரிம3,000 நிதியுதவியும் வழங்கப்பட்டது.
ஆலய நிர்வாகம், ஏற்பாட்டுக் குழுவினர், தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களின் அர்ப்பணிப்பினால் இவ்விழா சிறப்பாக நடைபெற்றதாகப் பாராட்டப்பட்டதுடன், சமய நிகழ்ச்சிகள் ஆன்மீக விழுமியங்களை வலுப்படுத்துவதோடு, கலாசார பாரம்பரியத்தைப் பேணவும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும் முக்கிய பங்காற்றுகின்றன என விஸ்வநாதன் தெரிவித்தார்.
சமுதாயத்தில் ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்தை தொடர்ந்து பேணிக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுன் என விஸ்வநாதன் கேட்டுக்கொண்டார்.