ஜார்ச்டவுன்–சமூகத்தில் தமிழ்மொழி, பண்பாடு மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், லெபு பாசார் கிராம சமூக நிர்வாகக் கழகம் (எம்.பி.கே.கே) ஏற்பாடு செய்துள்ள “இலவச தமிழ் மொழி வகுப்பு” இன்று தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், கல்வி என்பது பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடன் மட்டுப்படுத்தப்படாமல், சமூகத்திலும் தொடர்ந்து வளர வேண்டும் என்றும், மொழி மற்றும் பண்பாட்டைப் பாதுகாப்பதில் இதுபோன்ற சமூக முயற்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் தெரிவித்தார்.
“மொழி என்பது வெறும் தொடர்புகொள்ளும் கருவி அல்ல. அது ஒரு சமூகத்தின் வரலாறு, மதிப்புகள், சிந்தனை மற்றும் அடையாளம் ஆகியவற்றை உள்ளடக்கியது. எனவே, தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதும் பாதுகாப்பதும் மிகவும் அவசியம்,” என்றார்.
உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் பயன்பாட்டில் உள்ளபோதிலும், மக்கள் பயன்படுத்தாமல் விடும் மொழிகள் காலப்போக்கில் அழிந்துபோகும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்ட சாவ், தமிழ் மொழி அத்தகைய நிலையை எதிர்கொள்ளக் கூடாது, என்றார்.
மலேசியாவில், குறிப்பாக பினாங்கில், தமிழ் மொழி பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதனைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றும் அவர் கூறினார்.
மேலும், தேசியப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கும் தங்களது தாய்மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ஒருவர் இந்தியராக இருப்பதால் கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் அல்லது சீனராக இருப்பதால் கட்டாயம் சீன மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து சரியானதல்ல என்றார்.
“தேசியப் பள்ளியில் பயில்வது நாட்டின் நலனுக்கான நல்ல விடயமாகும். அதேவேளையில், தாய்மொழிகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும். பள்ளி வாயிலாகக் கற்க முடியாதவர்களுக்கு, சமூகத்தின் மூலம் தங்களது தாய்மொழியைக் கற்றுக்கொள்ள இதுபோன்ற வகுப்புகள் நல்ல வாய்ப்பை வழங்குகின்றன,” என்றார்.
இந்த இலவச தமிழ் வகுப்பில் 25 பேர் பங்கேற்கும் வகையில் இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மாதத்திற்கு நான்கு முறை, ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வகுப்புகள் நடைபெறும். இத்திட்டம் ஒரு வருட காலத்திற்கு நடத்தப்படவுள்ளது.
இந்த வகுப்பில் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழ் மொழியில் ஆர்வமுள்ள இரண்டு மலாய்க்காரர்கள், இரண்டு சீனர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் என மொத்தம் 25 பேர் இணைந்துள்ளனர்.
இதனிடையே, பினாங்கு மாநில அரசு இந்திய சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கும், குறிப்பாக தமிழ்ப்பள்ளிக் கல்விக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக சாவ் தெரிவித்தார்.
பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு, மாநில அரசின் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழுவின் மூலம் இவ்வாண்டு ரிம2.42 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளை நேரடியாக ஆய்வு செய்து, அவற்றின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அண்மைய ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப வசதிகள், STEM, கணினி ஆய்வகங்கள், மேக்கர் லேப் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த வசதிகளுக்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த இலவச தமிழ் மொழி வகுப்பு, கல்வி மற்றும் தமிழ்மொழி வளர்ச்சியில் சமூகமே நேரடியாகப் பங்களிக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாகும்.
அரசாங்கத்துடன் இணைந்து எம்.பி.கே.கே., மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளும் சமூகத்தின் தேவைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்,” என்றார்.
இதனிடையே, எம்.பி.கே.கே. லெபு பாசார் தலைவர் நபிசா பிந்தி சையத் முஸ்தபா, இத்திட்டத்தை ஆண்டு முழுவதும் நடத்துவதற்கு ஆதரவும் நிதியும் வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், மாணவர்களுக்கு நேரம், ஆற்றல் மற்றும் அறிவை அர்ப்பணித்து கற்பிக்க முன்வந்த தகுதிவாய்ந்த ஆசிரியருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
தமிழ் மொழி நீண்டகால வரலாற்றைக் கொண்ட செம்மொழியாக விளங்குவதுடன், திருவள்ளுவரின் திருக்குறள் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த பாரம்பரியச் செல்வங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதல் முறையாக எம்.பி.கே.கே லெபு பாசார் ஏற்பாடு செய்துள்ள இந்த வகுப்பு, மாணவர்களுக்கு மட்டுமின்றி, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டைக் கற்க ஆர்வமுள்ள இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கும் திறந்துவிடப்பட்டுள்ளதாக நபிசா தெரிவித்தார்.
“பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களை மொழி மற்றும் பண்பாட்டின் மூலம் ஒன்றிணைத்து, அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இது சிறியதொரு முயற்சியாக இருந்தாலும், சமூகத்திற்கு மிகப் பெரிய பயனை வழங்கும் என நம்புகிறோம்,” என்றார்.
இலவச தமிழ் வகுப்பை ஆரம்பித்த பின்னர் குறுகிய காலத்திலேயே கைவிடாமல், ஒரு வருடம் முழுவதும் தொடர்ந்து பங்கேற்குமாறு முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் பங்கேற்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
வகுப்பில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பரிந்துரையின் அடிப்படையில் சான்றிதழ்கள் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலவச தமிழ் மொழி வகுப்பு குறித்து கருத்து தெரிவித்த இராஜாஜி தமிழ்ப்பள்ளி ஆசிரியரும், இவ்வகுப்பின் ஆசிரியருமான வளர்மதி முனுசாமி, சமூகத்தினருக்குத் தமிழ் பேசுதல், எழுதுதல் மற்றும் அன்றாட உரையாடல்களில் தமிழைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பது மிகவும் சிறந்த முயற்சி என்றார்.
“இந்தத் திட்டம் மிகவும் நல்லதொரு முயற்சி. சமூகத்தினர் தமிழைக் கற்கவும், அன்றாட வாழ்வில் பேசவும் எழுதவும் வாய்ப்பளிக்கும் இம்முயற்சி வரவேற்கத்தக்கது,” என்றார்.
இலவச தமிழ் வகுப்புகள் மூலம் தமிழ் பேசுதல், எழுதுதல் மற்றும் அன்றாட உரையாடல்களில் தமிழைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள முடியும் என்றார்.

தமிழ் உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகும். தமிழைக் கற்பதன் மூலம் அதன் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை அறிந்துகொள்வதுடன், பிற சமூகங்களின் கலாசாரங்களையும் மரபுகளையும் அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.