தாழ்வான சாலை வடிவமைப்பே வெள்ளத்திற்கு காரணம் – சாவ் கொன் யாவ்

பினாங்கு பாயான் லெப்பாஸ் தொழிற்பேட்டை நான்காவது பிரிவில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் நோக்கில் பினாங்கு மாநகர் கழகம் அவ்வட்டாரத்தில் சாலை மற்றும் கால்வாய்களை மறுசீரமைப்பு செய்ததன் வழி அவ்வட்டாரத்தில் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வுக்காண முடிந்தது என அவ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.

மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் அவ்வட்டாரத்தில் இருக்கும் 13 நிறுவனங்களை பிரதிநிதித்து பினாங்கு மாநில அரசிடம் தமது வெள்ளப் பிரச்சனையை அறிவித்திருந்தது. இதனை கருத்தில் கொண்ட மாநில அரசு பினாங்கு மாநகர் கழகத்தின் முயற்சியில் வெள்ள பிரச்சனைக்குத் தீர்வுக்காண உடனடி திட்டம் மேற்கொள்ளப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார் சாவ் கொன் யாவ்.

தாழ்வான சாலை வடிவமைப்பு இவ்வட்டாரத்தில் வெள்ளம் நிகழ்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது என செய்தியாளர்களிடம் தெளிவுப்படுத்தினார். அத்தொழிற்பேட்டையில் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் தொழில் சம்மந்தமான நிறுவனங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

பினாங்கு மாநகர் கழகம் பாயான் லெப்பாஸ் பிரிவு 4 தொழிற்பேட்டையை மேம்படுத்த ரிம 1,145,000 செலவிட்டுள்ளதை சாவ் சுட்டிக்காட்டினார். மூன்று மாதங்களில் இந்தச் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்தது பாராட்டக்குரியதாகும்.. மாநில அரசு வெள்ளப் பிரச்சனையைக் கையாள தொடர்ந்து பல அரிய முயற்சிகளை கையாண்டு வருகிறது.

செய்தியாளர் சந்திப்பில் பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தீ திசின் மற்றும் பினாங்கு மாநகர் கழக உறுப்பினர் திரு.குமரேசன் உடன் கலந்து கொண்டனர்.