செபராங் ஜெயா– செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஊழியர்களிடையே தேசப்பற்று உணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில், “எம்.பி.எஸ்.பி எழுச்சிமிக்க சுதந்திர தினக் கொண்டாட்டம்” (Semarak Merdeka MBSP 2026) நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ படேருல் அமின் அப்துல் ஹமிட் கூறுகையில், மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சி, தேசியக் கொடியை ஏந்தி தேசப்பற்றுப் பாடல்களைப் பாடும் நிகழ்வாக மட்டுமின்றி, சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை எம்.பி.எஸ்.ப ஊழியர்கள் அனைவரும் உணர்ந்துகொள்வதற்கான ஒரு தளமாகவும் அமைந்துள்ளது, என்றார்.
சுதந்திரம் என்பது “மெர்டேகா” என முழக்கமிடுவதாலும், தேசியக் கொடியைப் பறக்கவிடுவதாலும் மட்டுமே அளவிடப்படக் கூடாது என்றும், ஒவ்வொரு குடிமகனின் அணுகுமுறை, செயல்பாடுகள் மற்றும் நாட்டிற்கான பங்களிப்பு ஆகியவற்றின் வாயிலாகவே அது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“குறிப்பாக, எம்.பி.எஸ்.பி ஊழியர்களைப் பொறுத்தவரை, நாம் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் பணிகளும் தேசப்பற்றின் ஓர் அங்கமாகும்.
“ஒவ்வொரு பணியையும் பொறுப்புடனும் நேர்மையுடனும் மேற்கொள்வது, ஒவ்வொரு முடிவையும் ஒருமைப்பாட்டுடனும் நேர்மையுடனும் எடுப்பது, மக்களுக்கு முழு அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றுவது ஆகியவை நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்தும் செயல்களாகும்,” என்று அவர் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், எம்.பி.எஸ்.பி செயலாளர் டத்தோ முகமட் இப்ராஹிம் முகமட் நோர், துறைத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் எம்.பி.எஸ்.பி. ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20 அதிகாரிகளைக் கொண்ட எம்.பி.எஸ்.பி. இசைக் குழுவினர், ‘Jalur Gemilang’ மற்றும் ‘Keranamu Malaysia’ ஆகிய பாடல்களைப் பாடி நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.
மேலும், எம்.பி.எஸ்.பி குழந்தைப் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உள்ளிட்ட 31 இளம் பங்கேற்பாளர்கள் தேசியக் கொடிகளை ஏந்தியபடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதன் மூலம் சிறு வயதிலிருந்தே நாட்டுப்பற்றை வளர்க்கும் முயற்சி வெளிப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, எம்.பி.எஸ்.பி துறைத் தலைவர்களிடம் தேசியக் கொடிகள் ஒப்படைக்கப்பட்டதுடன், *“3 PEAKS @ SABAH – 3 PUNCAK 1 SEMANGAT”* என்ற கருப்பொருளிலான எம்.பி.எஸ்.பி. மலையேற்றப் பயணமும் தொடக்கிவைக்கப்பட்டது. இம்முயற்சி, எம்.பி.எஸ்.பி ஊழியர்களின் உறுதி, ஒற்றுமை மற்றும் விடாமுயற்சியை எடுத்துக்காட்டுகிறது.
இதனிடையே, ஜாலான் பெர்டா உத்தாமா பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு 50 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன. இக்கொடிகளை படேருல் அமின், கவுன்சிலர்கள், மாநகரச் செயலாளர் மற்றும் துறைத் தலைவர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
எம்.பி.எஸ்.பி ஊழியர்கள் சுதந்திரத்தை ஒரு பொறுப்பாகக் கருதி, மக்களுக்கு தொடர்ந்து சிறந்த சேவையை வழங்க வேண்டும் என படேருல் அமின் வலியுறுத்தினார்.
“நமது களம் சேவை. நமது ஆயுதம் ஒருமைப்பாடு. நமது பலம் ஒத்துழைப்பு. நமது இலக்கு மக்களின் நல்வாழ்வு,” என்றார்.
ஜாலூர் கெமிலாங் வெறும் தேசியக் கொடி மட்டுமல்ல; அது ஒரு தேசத்தின் போராட்ட வரலாறு, தியாகம் மற்றும் எதிர்பார்ப்புகளைச் சுமந்து நிற்கும் அடையாளம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இறுதியில், சுதந்திரம் என்பது நினைவுகூறப்பட வேண்டிய வரலாறு மட்டுமல்ல; பாதுகாக்கப்பட வேண்டிய பொறுப்பு, நிறைவேற்றப்பட வேண்டிய கடமை மற்றும் நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டிய எதிர்காலமாகும்,” என்றார்.