தேசிய வரவு செலவு திட்டத்தில் பினாங்கு வீடமைப்புத் துறையின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினார் – ஜெக்டிப்

ஜார்ச்டவுன் – பினாங்கு உள்ளூராட்சி, வீட்டுவசதி, நகரம் மற்றும் திட்டமிடல் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ அண்மையில் தாக்கல் செய்த 2021 தேசிய வரவு செலவு திட்டத்தில் பினாங்கு வீடமைப்புத் துறை குறித்த நிதி ஒதுக்கீடு பற்றி கேள்வி எழுப்பினார்.

“அண்மையில், வெளியிடப்பட்ட தேசிய 2021 வரவு செலவு அறிவிப்பை வரவேற்பதாகவும், அதில் வீடமைப்புத் துறைக்கான ஒதுக்கீட்டை உற்று நோக்குவதாகக் கூறினார்.

குறைந்த வருமானம் பெறுநர்களுக்கு வசதியான மற்றும் தரமான வீடுகளை வழங்க மத்திய அரசு ரிம1.2 பில்லியனை ஒதுக்கியுள்ளது என்பதை அறிவோம்.

“இந்த நிதி ஒதுக்கீட்டில், மக்கள் வீட்டுவசதி திட்டங்கள் (பி.பி.ஆர்) அதாவது 14,000 வீடுகள் கட்ட ரிம500 மில்லியன் ஒதுக்கப்படுகிறது.

“பினாங்கு மாநிலத்தில் பி.பி.ஆர் திட்ட வீடுகள் எத்தனை கட்டப்படும், அதேவேளையல் இந்த பி.பி.ஆர் திட்டங்கள் எங்கே செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிக்க முடியுமா ? என கேள்வி எழுப்பினார்.

மாநில அரசு பினாங்கில் பி.பி.ஆர் திட்டம் மேம்படுத்துவதற்கான ஏற்ற ஐந்து இடங்களை அடையாளம் கண்டுள்ளதாக அறியப்படுகிறது.

அவை ஜெலுத்தோங் (வடகிழக்கு மாவட்டம்), ஜாலான் மாயாங் பாசிர் (தென்மேற்கு மாவட்டம்), உஜுங் பத்து (வடக்கு செபராங் பிறை), கம்போங் தொங்காங் (மத்திய செபராங் பிறை) மற்றும் பத்து கவான் (தெற்கு செபராங் பிறை) என ஐந்து மாவட்டங்களிலும் மொத்தமாக 72.3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பினாங்கு மாநிலத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இங்கு நில அடையாளம் காணும் செயல்முறைகள் நிறைவுப்பெற்றன.

“நாங்கள் நிலங்களை அடையாளம் கண்டுள்ளோம், தீவில் குறைந்தபட்சம் இரண்டு முன்மொழியப்பட்ட இடங்களை சரிப்பார்க்க வீடமைப்பு அமைச்சகம் முன்னதாகவே அத்தளத்திற்கு நேரடியாக வருகையளித்தது. எனவே, நேரத்தை வீணாக்காதீர்கள், ” என்று ஜெக்டிப் வலியுறுத்தினார்.

இந்த வரவு செலவு திட்டத்தில் குறைந்த விலை மற்றும் குறைந்த நடுத்தர விலை அடுக்குமாடி வீடுகளை பராமரிப்பதற்காக ரிம125 மில்லியன் நிதி ஒதுக்கீடு குறித்தும் ஜெக்டிப் கருத்துரைத்தார்.

“பினாங்கு அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் இதுவரை பொது வீடமைப்புத் திட்ட பராமரிப்புக்காக சுமார் ரிம260 மில்லியன் செலவிட்டுள்ளது.

இந்த ஆண்டு பினாங்கு மாநிலத்திற்கு பொது வீடமைப்புத் திட்டம் பராமரிக்க சுமார் ரிம32 மில்லியன் ஒதுக்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி நவிழ்ந்தார். இந்த ஆண்டு மத்திய அரசிடமிருந்து பெற்ற ரிம32 மில்லியனுக்கும் குறைவாக அடுத்த ஆண்டுக்கான நிதி வழங்கப்படாது என நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய அரசின் வரவு செலவில் 5,000 பிரிமா(PR1MA) வீடுகளை முதல் முறையாக வீடு வாங்குநர்களுக்கான ‘வாடகை முறையில் வீடுகள் கொள்முதல் திட்டம்’ (ஆர்.தி.ஓ) செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது.

” இந்த பிரிமா திட்டம் பினாங்கில் எங்கு நிர்மாணிக்கப்படும் என்றும் அதில் எத்தனை வீடுகள் ஆர்.தி.ஓ திட்டத்தில் இடம்பெறும் என கேள்வி எழுப்பினார்.

பினாங்கு மலேசியாவின் இரண்டாவது மிகச்சிறிய மாநிலமாக இருந்தாலும், இது நாட்டிற்கு இரண்டாவது மிக உயர்ந்த வரி வருவாயை அளிக்கிறது, ஓர் ஆண்டுக்கு சுமார் 7 பில்லியன் ஆகும்.

மத்திய அரசாங்கம் பொது வசதிகள் குறிப்பாக பொது வீடமைப்புத் திட்டங்கள் செயல்படுத்துவதற்கே வரி செலுத்துகிறோம்.

“பினாங்கிற்கு பொது வசதிகள் வழங்குவதற்கான பொறுப்பை மத்திய அரசு கொண்டுள்ளது. அதில் மலிவு வீடமைப்புத் திட்டம் வழங்கல் மிக முக்கியமானது,” என்று கூறினார்.