மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தீபாவளி அன்பளிப்பு – ஜெக்டிப்

ஜார்ச்டவுன் -மாநில உள்ளூராட்சி, வீட்டுவசதி, நகரம் மற்றும் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ, மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆரம்பகால தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு
உணவுப் பொருட்களுக்கான பொட்டலங்களை அன்பளிப்பாக வழங்கினார்.

“கோவிட் -19 தொற்றுநோய் கொண்டாடவிருக்கும் தீபாவளி பண்டிக்கைக்கு இடையூறாக அமைகிறது. பொதுவாகவே, ஒவ்வொரு பண்டிகையின் போதும் திறந்த இல்ல உபசரிப்பு நடத்துவது வழக்கமாகும்.

அந்த உபசரிப்பு நிகழ்ச்சி அன்று வசதிக் குறைந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் அல்லது பரிசுக்கூடை வழங்கப்படும்.

“துரதிர்ஷ்டவசமாக, கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு திறந்த இல்ல உபசரிப்பை நடத்த முடியவில்லை,” என்று ஜெக்டிப் ஸ்காட்லாந்து சாலையில் அமைந்திருக்கும் இராமகிருஷ்ணா ஆசிரமத்தில் இவ்வாறு கூறினார்.

“தற்போது இச்சூழலில் திறந்த இல்ல உபசரிப்பு நடத்த முடியாவிட்டாலும், வசதிக் குறைந்த பொது மக்களுக்குத் தொடர்ந்து நன்கொடை வழங்க உறுதிப்பூண்டுள்ளதாக,”
மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் டத்தோ கெராமாட்டை தொகுதியில் இடம்பெறும் ஈடன் ஹேண்டிகேப் சேவை மையம், பினாங்கு செஷயர் ஹோம், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கான பினாங்கு மையம், பெர்சத்துவான் சுகூர் பென்யயாங், பினாங்கு விஸ்மா யதிம் மற்றும் இராமகிருஷ்ணா ஆசிரமம் ஆகியோர் தீபாவளி அன்பளிப்பு பெற்றுக்கொண்டனர்.

இத்திட்டம் செயல்படுத்த ரிம40,000 நிதி ஒதுக்கீட்டில் 770 உணவுப் பொருட்களுக்கான பொட்டலங்கள் வழங்கப்பட்டன.