ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அண்மையில் பினாங்கில் நடைபெற்ற தைப்பூசத் தினக் கொண்டாட்டத்தில் பக்தர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உண்டியல் வசூல் ரிம252,934 என அறிவித்தது.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கணக்கிடப்பட்ட மொத்தத் தொகை பக்தர்களிடமிருந்து வந்த நன்கொடைகளிலிருந்து பெறப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
அதேவேளையில், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் பிற பணப் பொருட்களின் மதிப்பு கணக்கிடுவதற்காக வங்கிக்கு அனுப்பப்படும்.
இன்று கொம்தாரில் நடைபெற்ற உண்டியல் வசூல் கணக்கெடுப்பிற்கு தலைமை வகித்த பத்து உபான் சட்டமன்ற உறுப்பினரும் அறப்பணி வாரிய ஆணையருமான குமரேசன், தைப்பூசத்தின் போது பக்தர்கள் வழங்கிய நன்கொடைக்கு நன்றித் தெரிவித்தார்.
இன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை கொம்தாரில் நடைபெற்ற தைப்பூச நன்கொடை கணக்கெடுப்பு நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த 39 தன்னார்வாலர்கள் கலந்து கொண்டனர்.
பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையருமான குமரேசன் தனது உரையில், சேகரிக்கப்பட்ட நிதியை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த சேகரிக்கப்பட்ட பணம் ஆலய மேம்பாடு, கல்வி மற்றும் முக்கியமான முன்முயற்சி திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும், என்றார்.
அதே செய்தியாளர் சந்திப்பில், பட்டர்வொர்த், பாகான் ஜாலான் சீராமில் உள்ள இடுகாட்டில் தகனம் அமைப்பு கட்டுவதற்காக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு ரிம1.5 மில்லியன் ஒதுக்கீட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கியதை குமரேசன் அறிவித்தார்.
இந்த பங்களிப்பு, குறிப்பாக பினாங்கு மாநிலத்திலும் பொதுவாக மலேசியா முழுவதும் இந்து சமூகத்தின் சமூகநலன் மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை தெளிவாக பிரதிபலிக்கிறது என அவர் மேலும் விவரித்தார்.
இதனிடையே, இந்த ஆண்டு தைப்பூச கொண்டாட்டத்தை வெற்றிகரமாக்க பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் ரிம240,000 ஒதுக்கியதற்காக பாராட்டும் நன்றியையும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் குமரேசன் தெரிவித்துக் கொண்டார்.
கூடுதலாக, தொழில்முனைவு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் அவர்களுக்கும் இந்த கொண்டாட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய ரிம100,000 பங்களிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பேசுகையில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் பங்களிப்புகளுக்கு அவர் பாராட்டப்படும் நன்றியையும் நவிழ்ந்தார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் குமரன் வேலிசாமியும் உடனிருந்தனர்.
மேலும், தைப்பூசக் கொண்டாட்டம் பினாங்கு மாநிலத்தில் உள்ள பல்லின மற்றும் பல மத சமூகத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகும்.