தொடர்கிறது தங்கத் திட்டங்கள்

      மக்கள் நலன் பேணும் மக்கள் கூட்டணி அரசின் ஆக்ககரமான திட்டங்கள் பினாங்கு வாழ் மக்களின் மத்தியில் பேராதரவு பெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 30-ஆம் திகதி கொம்தார் டோமில் நடைபெற்ற பினாங்கு வடகிழக்கு மாவட்டத்திற்கான தங்க மாணவர் திட்டத்திலும் தங்கக்குழந்தைத் திட்டத்திலும் பங்கெடுக்க நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆண்டு 1,4 மற்றும் படிவம் 1,4 பயிலும் 250 தங்க மாணவர்களுக்கு ரிம 100-உம் 2011-ஆம் ஆண்டு பிறந்த 200 தங்கக்குழந்தைகளுக்கு ரிம 200-உம் வழங்கப்பட்டது. இந்த நிதியுதவி வழங்கும் விழாவில் மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங், சட்டமன்ற உறுப்பினர்களான திரு நேதாஜி இராயர், திரு இங் வெய் எய்க், திரு பீ போன் போ, திரு வொங் ஹொன் வாய் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இணையக் கணக்கெடுப்பின்படி இதுவரை சுமார் 18,208 தங்கக்குழந்தைகளும் 36,907 தங்க மாணவர்களும் இந்தத் திட்டங்களின் கீழ்ப் பதிந்துள்ளனர். எனினும், தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவாளர்கள்  மட்டுமே இவ்விழாவில் தங்களின் உதவித் தொகையைப் பெற்றுக் கொண்டார்கள். ஏனையவர்கள் மாவட்ட அலுவலகங்களில் தங்களின் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாண்புமிகு முதல்வர் தம் உரையில் கூறினார். இத்தொகை சிறியதாக இருப்பினும்  பெற்றோர்களின் செலவுச் சுமையை ஏதோ ஒரு வகையில் குறைக்க  மாநில அரசு இத்திட்டங்களின் மூலம் உதவுவதில் பெருமையும் மகிழ்வும் அடைவதாகத் தெரிவித்தார். ஊழல் ஒடுக்கப்படும்போது அங்கு ஊதியம் ஓங்கும் என்பது உறுதி. எனவே நல்லாட்சியைக் கொண்டு இலாபத்தை ஈட்டலாம். அதைக் கொண்டுதான் இன்று மக்களுக்குப் பயனளிக்கும் பல அரியத் திட்டங்களை எங்களால் செய்ய முடிகிறது என்று முதல்வர் பெருமையோடு கூறினார்.

தங்க மாணவர் திட்டத்தின் மூலம் பயனடைந்த இந்திய மாணவர்கள் பெரும்பாலானோர் அத்தொகையைத் தங்களின் பள்ளிச் செலவுகளுக்குப் பயன்படுத்தப் போவதாகக் கூறினர். ரிம 100 ஊக்குவிப்புத் தொகையைப் பெற்றுக் கொண்ட பத்து லஞ்சாங் தேசியப் பள்ளியைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவன் தர்வீன்ராஜ் அதனை வங்கியில் சேமிக்கப் போவதாகக் கூறினார். அவரின் தாயார் கிருஷ்ணவேணி இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று மாநில அரசின் முயற்சிகளைப் பாராட்டினார். மூத்த மகன் இந்த ஆண்டு எஸ்.டி.பி.எம் தேர்வு எழுதவிருப்பதால் நிச்சயம் அடுத்த ஆண்டு உயர்கல்வித் திட்டத்தின் உதவித் தொகை பெறுவான் என்றும் நம்பிக்கையோடு கூறினார். இந்நிதியுதவி வழங்கும் அடையாள விழா தெற்குச் செபராங் பிறையிலும் மத்திய செபராங் பிறையிலும் நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

399717_526661900684598_1000210902_n

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நான்காம் ஆண்டு மாணவன் தர்வீன்ராஜ் த/பெ பாலசுப்ரமணியம்

528611_526661827351272_2124510149_n

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முதலாம் ஆண்டு மாணவி ஆனந்தீஸ்வரி த/பெ கானா

‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ எனும் பழமொழிக்கொப்ப தகுதியுடைய மக்கள் பினாங்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் தங்கக் குழந்தை திட்டம், தங்க மாணவர் திட்டம், தங்க மாற்றுத் திறனாளி திட்டம், தனித்து வாழும் தங்கத் தாய்மார்கள் திட்டம், தங்க உயர்கல்வி மாணவர் திட்டம், ஈமச்சடங்கு உதவித் திட்டம் ஆகிய திட்டங்களில் பதிந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேற்தகவலுக்கு http://isejahtera.penang.gov.my இணையத்தளத்தை வலம் வாருங்கள்.