நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்ற தவறினால் கடுமையான நடவடிக்கை – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – பொது மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்ற வேண்டும், இல்லையேல் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.

மலேசிய காவல்துறை, பினாங்கு மாநகர் கழகம்(எம்.பி.பி.பி) மற்றும் ஊராட்சி மன்ற அதிகாரிகள் இன்று தொடங்கி இந்த ஆணையைப் பின்பற்ற தவறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தெரிவித்தார்.

“நேற்றைய நிலவரப்படி (28/3/2020), பினாங்கு மாநிலத்தில் இந்த ஆணையை மீறிய 158 பொதுமக்களை காவல்துறை அதிகாரிகள் கைதுச் செய்துள்ளனர். மேலும்,ரெலாவ் அருகாமையில் இருக்கும் ஸ்ரீ அமான் காம்ப்ளக்ஸ் சந்தையில்
சமூக இடைவெளி கடைப்பிடிக்கத் தவறியதாலும், பிற குற்றங்களைச் செய்ததாலும் , இச்சந்தையை மூட எம்.பி.பி.பி உத்தரவிட்டுள்ளது.

“அதே வேளையில், நாளை முதல் ஜெலுத்தோங் சந்தைக்கு வெளிப்புறத்தில் அமைந்துள்ள அனைத்து கடை வணிகர்களுக்கும் வியாபாரம் செய்யத் தடை விதிக்கபட்டுள்ளது.

” இந்த கட்டுப்பாட்டு ஆணையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற அதிகாரிகள் தயங்கமாட்டர், ஏனெனில் இது பொது மக்களின் பாதுகாப்புக் குறித்த விவகாரமாகும்,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் முகநூல் நேரலையில் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி வரையிலும் கோவிட்-19 தொற்று நோயிக்கு பினாங்கு வாழ் மக்கள் 86 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஆறு வழக்குகள் புதியதாகப் பதிவுச்செய்யப்பட்டுள்ளன.

“கத்தார் ஏர்வேஸ் கி.யூ.ஆர் 866 விமானம் மற்றும் ஸ்டார்மார்ட் எக்ஸ்பிரஸ் ஏ.ஜே.எஸ் 6666 பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் மாநில சுகாதாரத் துறையின் வழிக்காட்டலுக்கு இணங்க பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுத்தப்படுகின்றனர்.

” பேருந்து மற்றும் விமானப் பயணிகள் உடனடியாக சுகாதாரத் துறையைத் தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர், இது புறக்கணிக்க வேண்டிய விவகாரம் அல்ல,” என மாநில முதல்வர் நினைவுறுத்தினார்.

கோவிட்-19 வைரஸ்க்கு பாதிப்புக்குள்ளான இடத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்புச செய்ய வேண்டும் என நிருபரின் எழுத்து வடிவிலான கேள்விக்கு மாநில முதல்வர் இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை தான் பரிசீலனைச் செய்ய வேண்டும் என்றார்.

” இந்த கோவிட்-19 வைரஸ் துடைத்தொழிக்க மாநில அரசு மாநில சுகாதாரத் துறைக்கு ஒத்துழைப்பு நல்கி வருகிறது.தற்போது இந்த பிரச்சனை குறித்த அனைத்து தகவல்களும் சுகாதாரத் துறை மட்டுமே வெளியிட முடியும்,” என விளக்கமளித்தார்.