பத்து காவான் தொகுதியை வழிநடத்த சாவ் கொன் இயோவ் சிறந்த தேர்வு – இராமசாமி

Admin

புக்கிட் தெங்கா – பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக பக்காத்தான் ஹராப்பான் கட்சியைப் பிரதிநிதித்து முதல்வர் சாவ் கொன் இயோவ் போட்டியிடுவதற்கு

பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி முழு ஆதரவு அளித்துள்ளார்.

பிறை, புக்கிட் தெங்கா மற்றும் புக்கிட் தம்புன் ஆகிய மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய பத்து காவான் நாடாளுமன்ற தொகுதிக்கு சாவ் கொன் இயோவ் சிறந்த வேட்பாளர் என பேராசிரியர் ப.இராமசாமி புக்கிட் தெங்கா ஸ்ரீ மங்களநாயகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொது மக்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

“பத்து காவான் தொகுதியை வழிநடத்த சாவ் எங்களுக்குத் தேவை, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார், என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“மாநில முதல்வர் குறிப்பிட்டது போல பினாங்கின் எதிர்காலம் பத்து காவான் என்பதால், அவர் இங்கு களமிறங்குவது சரியானத் தேர்வாகும்.

“நாங்கள் அவரை வரவேற்கிறோம், இங்குள்ள அனைவரும் சாவுக்கு உங்கள் வாக்குகளை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்,” என பேராசிரியர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சாவ், தன்னை ஆதரித்த இராமசாமிக்கு நன்றித் தெரிவித்தார்.

“மேலும், இத்தொகுதியில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்; வீடமைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு போன்ற இந்திய சமூகப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவேன்,” என்று அவர் கூறினார்.

சாவ் தனது உரையிலும், சிறந்த எதிர்காலத்திற்காக புத்திசாலித்தனமாக வாக்களிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்தினார்.

“எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே பக்காத்தான் ஹராப்பான் (PH) உறுதிமொழியாகும்.

“அடுத்த வாரம் நடைபெறும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு வாக்காளர்களின் வாக்கெடுப்பும் நமக்கு சிறந்த எதிர்காலம் அமைய வித்திடும்,” என்று கூறினார்.

நிலையான அரசாங்கம் அமைந்தால் முதலீட்டாளர்கள் நம் நாட்டில் முதலீடு செய்வதில் மிகுந்த நம்பிக்கை கொள்வார்கள், என்றார்.

“PH-யால் பிரதமராக முன்மொழியப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம் நாட்டை வழிநடத்த சரியான மற்றும் திறமையான நபர்,” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியாவ்-லியுங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி மற்றும் ஸ்ரீ மங்களநாயகி ஆலய நிர்வாக உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.

முன்னதாக, புக்கிட் தம்புனில் மகளிர் சமூகத்துடனான ஒரு தேநீர் அமர்விலும் சாவ் கலந்து கொண்டார்.