பத்து காவான் தொகுதி வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வுக் காண இணக்கம் – சாவ்

Admin

புக்கிட் தெங்கா – மாநில அரசு கம்போங் டோக் மக்கள் எதிர்நோக்கும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வுக் காண இணக்கம் கொண்டுள்ளது. இந்தக் குடியிருப்புப் பகுதி தாழ்வான நிலப்பரப்பில் இருப்பதால் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது.

“மாநில அரசு, வடிக்கால் மற்றும் நீர்ப்பாசனத் துறை(ஜே.பி.எஸ்) மூலம் வெள்ள நிவாரணத் திட்டம் செயல்படுத்த ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கம்போங் டோக் மட்டுமின்றி கம்போங் தொக் பஞ்சாங்
உட்பட பத்து காவான் தொகுதியில் பல இடங்களில் வெள்ளப் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கூடிய விரைவில் வெள்ள நிவாரணத் திட்டங்கள் செயல்படுத்த உத்தேசிக்கப்படும்,” என்று பத்து காவான் தொகுதி வேட்பாளரான சாவ் கொன் இயோவ் கம்போங் டோக் பொது மக்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

இந்த சந்திப்புக் கூட்டத்தில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி, புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியோவ்-லியுங், கம்போங் டோக், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

பத்து காவான் வேட்பாளரான சாவ் கொன் இயோவ், கம்போங் டோக் பகுதியின் வடிக்கால் அமைப்பை நேரில் சென்று பார்வையிட்டார்.

இப்பகுதி குடியிருப்பு மக்கள் வடிக்கால் அமைப்பு, சாலை அமைப்பு மற்றும் குப்பைகள் சேகரிப்பு ஆகிய பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.

பத்து காவான் தொகுதியின் முன்னேற்றத்திற்கு சாவ் கொன் இயோவ் சிறந்த வேட்பாளர் என்றும் அவருக்கு ஆதரவு அளிக்குமாறும் பரப்புரையில் கூறினார்.