ஜார்ச்டவுன் – பாகான் டாலாமில் முதல் தேசிய தமிழ் இடைநிலைப்பள்ளி (SMKT) அமைப்பது தொடர்பாக மாநில அரசு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் இன்னும் ஆரம்பகட்ட ஆலோசனை மற்றும் ஆய்வு நிலையில் மட்டுமே இருப்பது கவலைக்குரியதாக இருப்பதாக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், இந்தத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் இன்னும் கூட்டரசு அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், முன்மொழிவு மேலும் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் புதியதல்ல என்றும், சட்டமன்ற அமர்வுகளில் பலமுறை முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை தெளிவான நிலை, அதிகாரப்பூர்வ முன்னேற்றம் அல்லது நம்பகமான செயல்திட்டம் எதுவும் அறிவிக்கப்படாதது பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக குமரன் தெரிவித்தார்.
பாகான் பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், தற்போதுள்ள பள்ளிகளின் வசதிகள் குறைந்து வருவதாகவும், தமிழ் இடைநிலைப்பள்ளி கல்விக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
“கல்வி என்பது தேர்வுசார் விஷயம் அல்ல; அது மக்களின் அடிப்படை உரிமை,” என குமரன் சட்டமன்ற கூட்டத்தொடரில் தனது தொகுப்புரையில் வலியுறுத்தினார்.
மாநில அரசு ஏற்கனவே பாகான் டாலாம் பகுதியில் 4 ஏக்கர் நிலத்தை பள்ளி கட்டுமானத்திற்காக ஒதுக்கியுள்ள நிலையில், நிலப் பற்றாக்குறை இனி தடையாக இருக்க முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“நிலம் தயார் நிலையில் இருக்கும்போது மற்றும் மாணவர்களின் தேவை தெளிவாக இருக்கும்போது, ஏன் இன்னும் அதிகாரப்பூர்வ விண்ணப்பம் கூட்டாட்சி அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லை?” என்ற கேள்வியை முன்வைத்தார்.
மேலும், இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவையா அல்லது நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான தடைகள் உள்ளனவா என்பதையும் அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.
எழுத்துப்பூர்வ பதிலில், ஆய்வு தேவை, கல்வி அமைச்சுடன் கலந்துரையாடல், பொருத்தமான இடம் அடையாளம் காணல் மற்றும் முழுமையான முன்மொழிவு ஆவணம் தயாரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், பாகான் டாலாம் தொடர்பில் நிலம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குமரன் சுட்டிக்காட்டினார்.
எனவே, எதிர்கால தலைமுறையின் நலனை கருத்தில் கொண்டு, இந்த செயல்முறையை விரைவுபடுத்தி, முழுமையான முன்மொழிவு ஆவணத்தை உடனடியாக இறுதி செய்து கூட்டரசு அரசிடம் சமர்ப்பிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வர முடியாத சூழ்நிலையில், தற்போதுள்ள இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி பாட விரிவாக்கம், தமிழ் சிறப்பு வகுப்புகள் மற்றும் கல்வி அமைச்சு மற்றும் சமூகத்துடன் மூலோபாய ஒத்துழைப்பு போன்ற மாற்று முயற்சிகள் பரிசீலிக்க வேண்டும் எனும் கோரிக்கையை குமரன் மாநில அரசிடம் முன்வைத்தார்.
“இந்த விவகாரம் நீண்ட காலமாக தீர்மானமின்றி தொடரும்போது, இந்த நிலை வெளிப்படைத்தன்மை மற்றும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் தவிர்க்கப்பட வேண்டும்.
“ஒரு மாநிலத்தின் மிகச் சிறந்த முதலீடு என்பது கட்டிடங்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் மட்டும் அல்ல; குழந்தைகளின் கல்வியிலும் இருக்க வேண்டும். பினாங்கின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப , அனைத்து சமூகங்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்க வேண்டும்,” என குமரன் நம்பிக்கை தெரிவித்தார்.