பாதுகாப்பு கருதி அந்நிய குடியேறிகள் உட்பட அனைவருக்கும் பி.எஸ்.சி-19 பரிசோதனை நடத்தப்படும் – பேராசிரியர்

Admin

பிறை – பினாங்கு கோவிட்-19 பரிசோதனை திட்டத்தின் (பி.எஸ்.சி-19) கீழ்  பிறை தொகுதியில்   சுமார் 1,000 குடியிருப்பாளர்கள் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிறை, தெலுக் இண்டா அடுக்குமாடி குடியிருப்புப்  பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மட்டுமின்றி முறையான ஆவணங்கள் இல்லாத அந்நிய குடியேறிகள்  உட்பட இத்திட்டத்தில்  இலவசமாக பங்கேற்கலாம்.

“இந்த கோவிட்-19 பரிசோதனை திட்டம் இத்தொற்றுக்கு இலக்கானவர்களை எளிதாக அடையாளம் காண்பதற்கும், அடுத்து இத்தொற்றை பரவாமல் கட்டுப்படுத்துவதற்கும்  நடத்தப்படுகிறது. மாறாக இம்மாநில குடிமக்கள் தகுதியைச் சரிப்பார்ப்பதற்கு அல்ல,” என இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கூறினார். 

“பிறை, தெலுக் இண்டா அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அதிகமான குடிமக்கள் இந்த பி.எஸ்.சி-19 பரிசோதனையில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இத்திட்டத்தில் குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள அனுமதிப்பது  மனிதநேய அடிப்படையிலும், மனிதர்களாக அவர்களின் ஆரோக்கியத்தையும் புறக்கணிக்கவும் கூடாது . 

“பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரையில், மாநில அரசு அந்நிய குடியேறிகள் முறையான குடியிருப்பு ஆவணங்கள் இல்லாத சூழலிலும் அவர்களையும் குடிமக்கள் போலவே பி.எஸ்.சி-19 பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்,” என்று பிறை மாநில சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி தெலுக் இண்டா அடுக்குமாடிக்கு அருகிலுள்ள பி.எஸ்.சி-19 மையத்தின் செயல்பாட்டை நேரில் சென்று பார்வையிட்டப்பின் இவ்வாறு கூறினார். 

இன்று காலை 10.30 மணி வரை கிட்டத்தட்ட 300 நபர்கள் பிறை தொகுதியின் கீழ் நடத்தப்பட்ட பி.எஸ்.சி-19  திட்டத்தில் பங்கேற்றனர். இருப்பினும், www.penangsaring.selangkah.my என்ற வலைத்தளம் மூலம்  சுமார் 80 பேர் மட்டுமே பதிவு செய்தனர், என பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர்  டேவிட் மார்ஷல் கூறினார்.  

“இத்திட்டத்தில் இணைய பதிவை விட நேரடியாகவே அதிகமானோர் வருகையளித்தனர். 

“தாமான்  தெலுக் இண்டா குடியிருப்பாளர்களில் பலர் பி40 குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும்  உயர் கல்வி கற்றவர்கள் அல்ல. எனவே, அவர்கள் நேரடியாக வருகையளிக்கவே விருப்பம் கொள்கின்றனர்.

“இந்தப் பகுதியில் தாமான் நாகசாரி போல் 
கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை(பி.கே.பி.டி) அமலாக்கம் காணாமல் தவிர்ப்பதற்கு இந்த பி.எஸ்.சி-19 திட்டம் அவசியம். ஏனெனில், இங்கு வாழும் பி-40 குழுவினர் பி.கே.பி.டி அமலாக்கத்தால் கூடுதல் சிக்கல் எதிர்நோக்க வேண்டியிருக்கும். மேலும், இப்பகுதியில் அருகாமையில் உள்ள நிறுவன உரிமையாளர்கள் தங்கள் தொழிலாளர்களை இந்த இலவச பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்,” என டேவிட் கேட்டுக்கொண்டார். 

மாநில அரசு இந்த பி.எஸ்.பி-19 திட்டத்தின் கீழ் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கோவிட்-19 பரிசோதனை உட்படுத்தாமல் அத்தொற்று அதிகமாக பரவியிருக்கும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் இந்த இலவச பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், என பரிந்துரைத்தார். 

இதற்கிடையில் எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்  ஜேசன் ராஜ் கூறுகையில், இன்று மாலை 5.30 மணிக்குள் இந்த பி.எஸ்.சி-19 திட்டத்தில் கோவிட்-19 தொற்றுக்கு இலக்கானவர்கள் மற்றும் அறிகுறிகள் கொண்டவர்களையும் அடையாளம் கண்டு உடனடி சிகிச்சைப் பெறவும் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த முடியும். 

“கடந்து ஜூன் மாத இறுதி முதல் தெலுக் இண்டா அடுக்குமாடி குடியிருப்பில் ஏறக்குறைய 100 கோவிட்-19 வழக்குகள் மற்றும் 3 இறப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசு பி.எஸ்.சி-19 திட்டம் மூலம் இந்த மாதிரி பாதிக்கப்பட்ட பகுதியில் நடத்தப்படுவதால் இத்தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். 

கடந்த ஜூன்,20-ஆம் நாள் பிறை சட்டமன்ற சேவை மையம் மற்றும் இரு அரசு சாரா அமைப்புகள் மூலம் ‘லெபோ குராவ் 3’ திரள் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்கள், சாய் லெங் பார்க் வியாபாரிகள் உட்பட இலவசமாக கோவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது. 

இந்த கோவிட்-19 பரிசோதனையில் 600 பேர்கள் கலந்து கொண்டனர். மூவருக்கு இத்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இப்பரிசோதனைக்கு முன்னதாக 130 பேர்கள் இத்தொற்று இலக்கானது குறிப்பிடத்தக்கது.