பாதுகாப்பு & சுகாதார கார்னிவல் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் – பேராசிரியர்.

Admin
மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் பாகான் டாலான் சட்டமன்ற உறுப்பினர் சத்திஸ் பாதுகாப்பு & சுகாதார கார்னிவலில் இடம்பெற்ற கூடாரங்களைப் பார்வையிட்டனர்.

பிறை– “வடக்கு மலாயா சோங் கிளான் சங்க ஏற்பாட்டில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த பாதுகாப்பு & சுகாதார கார்னிவல் அனைத்து இன மக்களுக்கும் நன்மை அளிக்கிறது. இம்மாதிரியான சுகாதார கார்னிவல் நடத்துவதன் வாயிலாக பொது மக்களுக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறதுஎன இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.

இந்த பாதுகாப்பு & சுகாதார கார்னிவலில் அடிப்படை சுகாதார பரிசோதனை, பல் பரிசோதனை, கண் பரிசோசனை, இரத்த தான முகாம் மட்டுமின்றி பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்புப் படை மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டன.

முற்றிலும் இலவசமாக நடைபெற்ற இந்நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

வடக்கு மலாயா சோங் கிளான் சங்கம் போன்ற அரசு சாரா இயக்கங்கள் நடத்தும் சமூக நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இதனையே பிற இயக்கங்களும் முன் மாதிரியாகக் கொண்டு சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையில் நிகழ்வுகள் நடத்த வேண்டும் என பேராசிரியர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பாகான் டாலான் சட்டமன்ற உறுப்பினர் சத்திஸ், வடக்கு மலாயா சோங் கிளான் சங்கத் தலைவர் செங் கெங் சூ கலந்து கொண்டனர்.

பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி இந்நிகழ்வுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சிறு நன்கொடையும் வழங்கினார்.

மாநில அரசின் தூய்மை, பசுமை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புஎன்ற கொள்கையைப் பின்பற்றும் வகையில் இந்நிகழ்வு இடம்பெறுவதாக மேலும் தெரிவித்தார்.