ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்திலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நில உரிமைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் டிஜிட்டல் கல்வி வசதிகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு மாநில அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.
எனவே, ஆண்டுதோறும் ரிம2.4 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக, மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழுவின் தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத்தின் 15வது சட்டமன்றத்தின் நான்காவது தவணைக்கான இரண்டாவது கூட்டத்தின் நிறைவுரையின்போது, தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு தொடர்பான பல்வேறு சாதனைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
அதன்படி, மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய கட்டடங்களை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இராஜாஜி தமிழ்ப்பள்ளிக்காக 2.638 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், புதிய பள்ளிக் கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
அதேபோல், 2009ஆம் ஆண்டு முதல் சுமார் 17 ஆண்டுகளாகத் தாமதமடைந்திருந்த சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் மறுமேம்பாட்டுத் திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2026 செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
இதற்கிடையில், ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடம் மற்றும் இடமாற்றத்திற்காக பினாங்கு மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து (பி.டி.சி) நான்கு ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்ப்பள்ளிகளின் நில உரிமைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மலாகோஃப் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு நான்கு ஏக்கர் நிலம் வழங்குவதற்கு 2025ஆம் ஆண்டு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், திரான்ஸ்கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி, அல்மா தோட்டத் தமிழ்ப்பள்ளி, மேஃபீல்ட் தமிழ்ப்பள்ளி மற்றும் பழனியாண்டி தமிழ்ப்பள்ளி ஆகியவற்றின் நில உரிமைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளையில், பினாங்கிலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளிலும் நவீன கல்வி வசதிகளை ஏற்படுத்தும் முயற்சிகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டுகள், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள், டிஜிட்டல் நூலகங்கள் மற்றும் மேக்கர்ஸ் லேப்கள் உள்ளிட்ட நவீன டிஜிட்டல் கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மொத்தம் 130 டேப்லெட் சாதனங்களை வழங்கும் முன்னோடித் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சிறந்த பள்ளிக் கட்டடங்களை அமைப்பது மட்டுமே கல்வி மேம்பாட்டிற்குப் போதுமானதல்ல. மாணவர்கள் நவீன தொழில்நுட்ப வசதிகள், சிறந்த கற்றல் சூழல் மற்றும் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகளையும் பெறுவது அவசியம் என சுந்தராஜூ வலியுறுத்தினார்.
இந்த முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் பினாங்கு முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவுக்கும், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழுவின் துணைத் தலைவருமான குமரன் கிருஷ்ணனுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“இன்றைய கல்விக்கான முதலீடுதான் நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான முதலீடாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.