சாலைத் தடுப்புகள் வழியாகச் செல்லும் பொது மக்கள் அதிகாரிகளுக்கு நல்ல ஒத்துழைப்பு நல்குகின்றனர்

 

ஜார்ச்டவுன் –  பிப்ரவரி,2  2021 அன்று மாநிலத்தில் அமல்படுத்திய நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி) விதிமுறைகளை மீறியதற்காக 32 சம்மன்கள் மட்டுமே பினாங்கு மலேசிய அரசு காவல்துறை (பி.டி.ஆர்.எம்) வழங்கியுள்ளது.

பினாங்கு காவல்துறைத் தலைவர், கமிஷனர் டத்தோ சஹாபுதீன் அப்துல் மனன் கூறுகையில், வெளியிடப்பட்ட அனைத்து சம்மன்களும் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 45 சாலைத் தடுப்புகளில் (எஸ்.ஜே.ஆர்) வழங்கப்பட்டுள்ளன.

“இன்று 32 சம்மன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால், திரும்பிச் செல்லும் உத்தரவு மற்றும் ஆலோசனை நடவடிக்கை சார்ந்த 1,907 வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளன,” என்று அவர்  சிறப்பு நேர்காணலில் வாயிலாக முத்துச்செய்திகள் நாளிதழிடம் கூறினார்.

சஹாபுதீன் கூறுகையில்,பினாங்கில்  நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஓ.பி)  98 சதவீதம் பின்பற்றப்படுகிறது.

“பினாங்கில் பொது மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடத்துக்கொள்கின்றனர்.
எனவே, காவல் துறை முதலில் ஆலோசனை வழங்கும் யுக்தியை பயன்படுத்து, பின்னர் எஸ்.ஓ.பியை மீறுபவர்களுக்கு எதிராக சம்மன் கொடுப்பதற்கு முன் எச்சரிப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.

பி.கே.பி 1.0 மற்றும் பி.கே.பி 2.0 காலகட்டத்தில் 843 காவல் படை அதிகாரிகள் கொண்டு பினாங்கு மாநிலத்தில் ஐந்து மாவட்டங்களிலும் 45 சாலைத் தடுப்புகளை  மேற்கொண்டுள்ளன.

ஒவ்வொரு சாலை தடுப்பு முகாமும் காவல் துறை தலைமையில் செயல்படுகிறது.அதே நேரத்தில், மலேசிய ஆயுதப்படை(ஏ.டி.எம்), மலேசிய தன்னார்வத் துறை (ரெலா) மற்றும் போலிஸ் தன்னார்வலர்கள் ஆகியோர் உடன் கடமையில் ஈடுப்படுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், செபராங் பிறையில் பல சாலைத் தடுப்பு இடங்களில் முத்துச்செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட  ஆய்வில், போக்குவரத்து சற்று நெரிசலாக இருந்தாலும், அவைக் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கண்டறியப்பட்டது.

சாலைத் தடுப்புகள் வழியாகச் செல்லும் பொது மக்கள் அதிகாரிகளுக்கு நல்ல ஒத்துழைப்பு நல்குவதைக்  காண முடிந்தது.

வாகனமோட்டியை காவல்துறை அதிகாரி சோதனையிட்டார்

செபராங் பிறையில்  எட்டு சாலை தடுப்புகள் போடப்பட்டு பொது மக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.