பினாங்கில் இந்திய பாரம்பரியமும் கலாச்சாரமும் பிரதிபலிக்கும் புதிய கலைக்கூடம்

Admin
620ead97 806a 4e3c bad1 334a049508b1

ஜார்ச்டவுன் – லிட்டில் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள இந்திய பாரம்பரியக் கலைக்கூடம் மற்றும் பினாங்கு கலாச்சார மையம், மாநிலத்தில் உள்ள இந்தியச் சமூகத்தின் வரலாறு, அடையாளம் மற்றும் பங்களிப்புகளைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
img 20260501 wa0100

இந்தக் கலைக்கூடம் வெறும் கண்காட்சிக்கான இடமாக மட்டுமல்லாமல், இந்தியச் சமூகத்தின் பயணக் கதைகளைப் பதிவு செய்து, அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்கும் முக்கிய தளமாகவும் விளங்குகிறது என முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
img 20260501 wa0124

வர்த்தகம், துறைமுகம் மற்றும் சிறு, நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட பல துறைகளில், பினாங்கின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் இந்தியச் சமூகம் நீண்ட காலமாக முக்கிய பங்காற்றி வருகிறது; இப்பங்களிப்புகள் இன்றுவரை தொடர்ந்து நிலைத்திருக்கின்றன.

img 20260501 wa0101

“2008ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட ஜார்ச்டவுனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மையப்பகுதியில் அமைந்துள்ள ‘லிட்டில் இந்தியா’, இம்மாநிலத்தின் கலாச்சாரப் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் மிகவும் துடிப்பான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

ab5eeeff 0f80 4667 86d5 ca52eb46cddb

“எனவே, லிட்டில் இந்தியா என்பது வெறும் வணிகத் தளம் மட்டுமல்ல; அது தலைமுறை தலைமுறையாக மக்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு உயிரோட்டமாகத் திகழும் கலாச்சார சின்னமாகும். இங்குதான் பாரம்பரியமும் பொருளாதார நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து மேம்பாடு கண்டு வருகின்றன,” என்று இங்குள்ள கலைக்கூடத்தைத் திறந்து வைத்தபோது அவர் தெரிவித்தார்.
072e2923 dcda 491e b3c4 d414a2371c62

மேலும், பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சரும் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் ஹுய் யிங்; செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன; வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரான டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ; சுற்றுலா மற்றும் ஆக்கப்பூர்வ பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினரான வோங் ஹான் வாய்; ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.எஸ்.என். இராயர்; மற்றும் பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) மேயர் டத்தோ இராஜேந்திரன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

3aa88d9c 0e9e 4c83 8d00 b01b644c4a23
மேலும் கருத்து தெரிவித்த கொன் இயோவ், பினாங்கில் அருங்காட்சியக மேம்பாடு ஒழுங்குமுறையுடனும் உயர்தரத்துடனும் அமைய உறுதி செய்யும் வகையில், மாநில அருங்காட்சியகச் சட்டத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்

“எனவே, பினாங்கில் அருங்காட்சியகங்களின் மேம்பாடு ஒழுங்குமுறையுடனும் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் அமைய உறுதி செய்வதற்காக, மாநில அருங்காட்சியகச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.”

“நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே அருங்காட்சியகங்களாக அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதன் மூலம் மாநிலத்தின் பாரம்பரியத் துறையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் இந்த நடவடிக்கை முக்கியமானதாகும்,” என்று அவர் தெரிவித்தார்.

லிட்டில் இந்தியாவை ஒரு துடிப்பான கலாச்சார மாவட்டமாக மாநில அரசு தொடர்ந்து வலுப்படுத்தும் என முதலமைச்சர் வலியுறுத்தினார்.

“பாரம்பரியம் என்பது கடந்த காலத்தின் பிரதிபலிப்பு மட்டுமல்ல; அது பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும், சமூக அடையாளத்தை வலுப்படுத்துவதற்கும், பாரம்பரிய நகரமாக பினாங்கின் நிலையை உயர்த்துவதற்கும் எதிர்காலத்திற்கான ஒரு மதிப்புமிக்க அடையாளமாக அமைகிறது.”

ஜார்ச்டவுன் உலக பாரம்பரிய நிறுவனம் (GTWHI) மற்றும் 2016ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டு தற்போது திருத்தப்பட்டு வரும் ஜார்ச்டவுன் சிறப்புப் பகுதித் திட்டத்தின் பங்களிப்பின் மூலம், பாரம்பரியப் பாதுகாப்பு முயற்சிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாக கொன் இயோவ் விளக்கமளித்தார்.

இதற்கிடையில், சுந்தராஜூ தனது உரையில், இந்தியச் சமூகத்தின் பங்களிப்புகளைப் பாதுகாத்து அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்பதில் ஒரு முக்கிய முன்முயற்சி திட்டமாக இந்தக் கலைக்கூடம் நிறுவப்பட்டதை வெகுவாகப் பாராட்டினார்.

‘இந்தக் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சேகரிப்பு மிகவும் மதிப்புமிக்கதாகும். மேலும், பல பாரம்பரியப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இது விரிவுபடுத்தப்படவோ அல்லது பிற இடங்களுக்கும் பகிரப்படவோ வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“இது தொடர்பாக, இந்த முயற்சிக்கு தனது தனிப்பட்ட ஆதரவையும் அரசியல் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்த மாநிலத்தில் உள்ள இந்தியச் சமூகத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியம் குறித்த பொதுமக்களின் புரிதலை வளப்படுத்துவதில், முதலமைச்சரின் முழுமையான ஆதரவும் இதற்கு கிடைக்கும் என அவர் உறுதியாக நம்புவதாகவும்,” கூறினார்.