பினாங்கில் இனி வறுமை இல்லை

34993_545271722156949_1795568784_n

ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் சபாநாயகர் திரு ஹஜி அப்துல் ஹலிமுடனும் முதலாம் துணை முதல்வர் டத்தோ மன்சோர் ஒஸ்மானுடனும் இணைந்து முதல்வர் உயர்திரு லிம் குவான் எங் அணிச்சல் வெட்டி சட்டமன்ற கூட்டத்தை இனிதே நிறைவு செய்கிறார்.

பினாங்கு வாழ் குடும்பங்கள் குறைந்தபட்ச மாத வருமானத்தை அதாவது வறுமைக் கோட்டிற்கு மேலாக ரிம600-லிருந்து ரிம770-ஆக பெறுவதற்கு   2013-ஆம் ஆண்டிற்காகப் பினாங்கு மாநில அரசு ரிம 20 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் அடிப்படையில், ரிம770க்கும் குறைவாக மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாநில அரசு தொகை அதிகரிப்புச் ‘top-up’ செய்து அவர்களின் வருமானம் குறந்தது ரிம770-ஆக இருப்பதை உறுதி செய்யும்.

     அண்மையில் நடைபெற்ற இந்த ஆண்டின் இரண்டாம் தவணைக்கான சட்டமன்றச் சந்திப்புக் கூட்டத்தில் மாண்புமிகு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் ‘Agenda Ekonomi Saksama’ (AES) எனப்படும் நியாயமான பொருளாதாரத் திட்டம் என்ற கருப்பொருளில் பினாங்கு மாநிலத்தின் 2013-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைப் படைத்தார். 2009-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் ஏழைக்கு ஆதரவு ‘pro-poor’ என்னும் திட்டத்தை அமல்படுத்தியதன் வழி பினாங்கு மாநிலம் மிகக் கடுமையான வறுமை எனக் கருதப்பட்ட வறுமைக் கோட்டின் குறைந்தபட்ச மாத வருமானத்தை ரிம500-லிருந்து ரிம600க்கு உயர்த்தி வெற்றி கண்டது. அவ்வகையில், இம்முறை மக்கள் கூட்டணி அரசு பினாங்கு மாநிலத்தில் வறுமையை முற்றாக ஒழிப்பதற்கான தீவிர செயற்திட்டத்தில் இறங்கியுள்ளது.

மாநிலத்தின் சிறந்த நிர்வாகத்தால் 2011-ஆம் ஆண்டில் சிறந்த பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்ததன் பலனாக 2015-க்குள் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற மாநில அரசின் தூர நோக்குக் குறிக்கோளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமே அதாவது 2013-இல் அடைந்திட அரசு எண்ணம் கொண்டுள்ளது. தொடர்ந்து, அடுத்த ஆண்டுக்கான சமூகம் மற்றும் பொது நல திட்டங்களுக்காக மக்கள் கூட்டணி அரசு ரிம60,000 ஒதிக்கீடு செய்துள்ளதாக முதல்வர் லிம் குறிப்பிட்டார். மேலும், இந்தத் திட்டங்களின் மூலம் பினாங்கு மாநில அரசு மலேசியாவில் முதல் மாநிலமாகச் சுழியம் வறுமை, சுழியம் வேலையின்மை, சுழியம் ஊழல் மட்டுமன்றி நிச்சயம் ஒரு நாள் சுழியம் கடன்தொகையையும் பதிவு செய்யும் என்றும் கருத்துரைத்தார்.

மனித மூலதனத்தின் வளர்ச்சிக்காக மூலதன உதவி பெறும் பள்ளிகளான அரசு சமூகச் சமயப் பள்ளிகள், சீனப் பள்ளிகள், தமிழ்ப் பள்ளிகள் மற்றும் சமய நோக்கப் பள்ளிகளுக்காக ரிம12 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது. மேலும், மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மகளிர் அறிவுத் திறன்களை வளர்ப்பதற்குத் தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர    ரிம 2.3 கோடியும், மார்பக புற்றுநோயைத் தவிர்ப்பதற்கு மகளிர் இலவச மெமொகிராம் ‘Memogram’ பரிசோதனை செய்து கொள்ள சட்டமன்றத்துடன் இணைந்து நடத்தும் மார்பக புற்றுநோயில்லா உடல்நலத் திட்டத்திற்காக ரிம3 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது. தொடர்ந்து, விளையாட்டு மேம்பாட்டிற்காக 7.67 கோடியும் இளைஞர்கள் உள்ளடக்கிய நிகழ்ச்சிகளுக்காக ரிம752,000-உம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பினாங்கு முழுவதும் ஃபுட்சால் அரங்கம் அமைக்க ரிம5 கோடி சிறப்பு மானியமும் வழங்கப்படவுள்ளது. இவற்றைத் தவிர பொதுச் சேவை மேம்பாட்டுக்காக 7.466 கோடி மானியங்களும், விவசாயத் துறை மேம்பாட்டுக்காக ரிம7.18 கோடி மானியங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வரின் முழு வரவு செலவுத் திட்டத்தைக் காண www.penang.gov.my என்னும் அகப்பத்தையோ cmlimguaneng என்னும் முகநூல் பக்கத்தையோ வலம் வரலாம்.