பினாங்கில் கோவிட்-19ஐ எதிர்கொள்ள 6 மில்லியன் முகக் கவசங்கள்

ஜார்ச்டவுன்- பினாங்கு மாநில அரசு கோவிட்-19 தொற்றுக் கிருமியைப் பரவாமல் தடுக்கும் முன்வரிசை தரப்பினர் மற்றும் பொது மக்களின் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில் 6 மில்லியன் முகக் கவசங்கள் வாங்குவதற்கு ஆணை வழங்கியது.

முகக் கவசம் கட்ட கட்டமாக வழங்கும் பொருட்டு விநியோகிப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தியதாக மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கூறினார்.

“இந்த முகக் கவசம் முன்வரிசை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப விநியோகிக்கப்படும்; இதன் மூலம் அவர்களின் பணிகள் வலுப்படுத்துகிறது. அதோடு, சமூகத்தின் தேவையும் பூர்த்திச் செய்யப்படும்.

” மாநில அரசு ஆர்டர் செய்த முகக் கவசம் கட்ட கட்டமாகக் கிடைக்கப்பெறும் என்றும், மேலும் ‘தெர்மோமீட்டர்’, கைத்தூய்மி(sanitizer) போன்ற பொருட்களின் விநியோகம் குறித்த நிலையும் அறிவிக்கப்படும் என கூறினார்.

“இன்று மாநில அரசின் தலைமையில் இரு மாநகராட்சி கழகங்கள், பாதுகாப்புப் படைகள் மற்றும் முன்வரிசை பணியாளர்கள் அனைவரும் தங்கள் சேவையை வலுப்படுத்த கைத்தூய்மி மற்றும் ‘தெர்மோமீட்டர்’ வழங்கப்பட்டன. மாநில அரசு தன்னார்வலர் உதவியுடன் தனிமையில் வாழும் ஊனமுற்றோர் மற்றும் மூத்தக்குடிமக்களின் சமூலநலன் குறிப்பாக உணவுப்பொருட்கள் வழங்க உதவுகிறது.

பினாங்கு சிறப்பு பாதுகாப்புக் குழு மற்றும் அரசியல் முகவர்களுடனான சந்திப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் முகநூல் நேரலை ஒளிபரப்பில் முதல்வர் இவ்வாறு கூறினார்.

அண்மையில் பிரதமர் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க ரிம130 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தார். அந்நிதியில் பினாங்கு மாநிலத்திற்கு கிடைக்கப்படும் ரிம10 மில்லியன் கோவிட்19-ஐ எதிர்நோக்க பயன்படுத்தப்படும், என்றார்.

“மாநில அரசு பினாங்கு மாநில சுகாதாரத் துறைக்கு அனைத்து உதவிகளும் குறிப்பாக மருத்துவ உபகரணங்கள் என பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சேவைகள் வழங்குவதை உறுதிச் செய்வதற்காகவும் இப்பிரச்சினை கையாள்வதற்கும் துணைபுரியும்.

” மாநில அரசு தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யு) அறைகள் போன்ற வசதிகளை வழங்கும் பொருட்டு ஆராயும்” என்று நில விவகாரம் & நில மேம்பாடு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினரான முதல்வர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மலேசிய காவல்துறை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நாடளவில் 92 விழுக்காடு பின்பற்றும் வேளையில் பினாங்கு மாநிலம் 90 விழுக்காடு அடைவுநிலை அடைந்ததாக
கொன் யாவ் குறிப்பிட்டார்.

எனவே, பினாங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைத் துரிதப்படுத்தும் வகையில் இரண்டு கூடுதல் நடவடிக்கைகள் நடைமுறை படுத்தப்படும்
என்று கூறினார்.

முதலாவதாக ‘கேட்’ இலவச பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இரண்டாவது, இந்த ஆணையத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய வணிக வளாகங்கள் வருகின்ற 25 மார்ச் 2020 முதல் தினசரி காலை மணி 6.00 முதல் இரவு மணி 8.00 வரை மட்டுமே செயல்படும்.

மேலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் MITI / அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் நேர வரையறைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அண்மையில் தெப்ப திருவிழாவில் கலந்து கொண்ட பொது மக்கள் கோவிட்-19 தொற்று நோயிக்கு ஆட்கொள்ளவில்லை என கூடுதல் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.