பினாங்கில் முதல் முறையாக மாநில அளவிலான தமிழ்மொழி சொற்போர் போட்டி – சூன் லிப் சீ

ஜோர்ஜ்டவுன் – பினாங்கு மாநில கல்வி இலாகா முதல் முறையாக தமிழ்மொழியில் சொற்போர் போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினரான சூன் லிப் சீ தெரிவித்தார்.

தொடக்கத்தில் இந்த சொற்போர் போட்டி  மலாய் , ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் மட்டும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.  இருப்பினும் தமிழ்மொழியிலும் நடத்தப்பட வேண்டும் என்ற வரவேற்பு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து கல்வி இலாகா அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

” சொற்போரில் மாணவர்கள் கலந்துக் கொள்வதன் மூலம் அவர்களின் பேச்சு மற்றும் சிந்தனை திறன் மேம்படுத்தப்படுகிறது; மேலும்  அவர்களின் சொல் வளம் மற்றும் பகுத்தறிவு வளர்க்கப்படுகிறது,” என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சூன் லிப் சீ தெரிவித்தார்.

நாளை (9/1/2019) கல்வி இலாகா,  மாநில அளவிலான ‘எதிர்காலத்திற்கான இளைஞர்கள்’ கிண்ண சொற்போர் போட்டிக்கான சுற்றறிக்கையை அனைத்து தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் 45 இடைநிலைப்பள்ளிகளுக்கும்  அனுப்புமென மொழி பிரிவுக்கான தலைமை துணை இயக்குநர் பஸிலாவாத்தி பிந்தி ஜாமாலுடின் கூறினார்.

“பினாங்கு மாநிலத்தில் 28 தமிழ்ப்பள்ளிகள் இயங்கும் வேளையில் தமிழ்மொழி பிரிவுக்கான சொற்போர் போட்டியில் கலந்துக் கொள்ள 16 குழுக்கள் முன் வர அதிக வாய்ப்புள்ளது,” என
பினாங்கு மாநில  தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு செயற்குழுத் தலைவர் டத்தோ கே அன்பழகன் நம்பிக்கை தெரிவித்தார்.

நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய இப்போட்டியில் ஒரு பள்ளி ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு குழுவை மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும். ஒரு குழுவில் ஐந்து மாணவர்கள் இடம்பெறுவர்.

மாணவர் திறன் மேம்பாடு துணை இயக்குநர் ( Unit Pembangunan Bakat Murid) சாபாருடின் பின் டாவுட் மற்றும் தமிழ் மொழி பிரிவு துணை இயக்குநர் சகுந்தலா செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் மாணவர்கள்  கலந்துக் கொள்ள ஊக்கமளிக்கும் வகையில் ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ  ஆதரவில் ஒவ்வொரு பிரிவிற்கான
முதல் நிலை வெற்றி குழுவிற்கு கோப்பை மற்றும் நற்சான்றிதழுடன் ரிம1,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இரண்டாவது நிலை வெற்றி குழுவினர் ரிம500 -ஐ பெறும் வேளையில், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பெறும் குழுவினருக்கு ரிம300 ரொக்கப்பணமும் நற்சான்றிதழ்களும் வழங்கப்படும். சிறந்த பேச்சாளருக்கு நற்சான்றிதழுடன்,ரிம500 ரொக்கப் பரிசும் கொடுக்கப்படும்.

எதிர்காலத்தில் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் தலைசிறந்த தலைவர்களை உருவாக்கும் சிறந்த தளமாக இப்போட்டி திகழ்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த சொற்போர் போட்டியைப் பற்றிய மேல் விபரங்களுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ அலுவலகம் 04-2618744 அல்லது கல்வி இலாகா அலுவலகம் 04-6521194 போன்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.