பினாங்கில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் (Exco) இன்று பதவியேற்றனர்.

இந்தப் பதவியேற்பு சடங்கு, மாநில ஆளுநர் துன் அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக் முன்னிலையில் ஸ்ரீ பினாங்கு அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், அவர் தம் துணைவியார் தான் லீன் கீ; மாநில சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அரசு துறைத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

“இந்தத் தவணைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பட்டியலானது ஒற்றுமை அரசாங்கத்தின் அனைத்து கட்சிகளின் ஒருங்கிணைப்பில் எடுக்கப்பட்டது.

“பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியலில் புதிய முகங்கள் இருந்தாலும் அவர்களின் அரசியல் அனுபவத்தின் வாயிலாக சிறந்த நிர்வாகத்தை வழிநடத்த முடியும்,” என மாநில முதலமைச்சர் சாவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

முன்னதாக ஆகஸ்ட்,13 ஆம் தேதி முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மேதகு சாவ் கொன் இயோவ் அவர்கள் நிதி, பொருளாதாரம், நிலம், தகவல் தொடர்பு மேம்பாட்டுத் துறையை வழிநடத்துவார்.

இந்த பதவியேற்பு விழாவில், மாநில முதலாம் துணை முதலமைச்சராக பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் அப்துல் ஹமீட் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். பத்து மாவுங் சட்டமன்ற உறுப்பினருமான அவர், இஸ்லாமிய சமய மேம்பாடு, கல்வி, உயர் கல்வி மற்றும் சமூக ஒற்றுமை துறைக்கு
தலைமை தாங்குகிறார்.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக வலம் வந்த ஜக்டிப் சிங் டியோ மாநில இரண்டாம் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும், அவர் மனித வள மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறையை வழிநடத்துவார்.

பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு,61 சொத்துடைமை தொழிலுக்குப் புதியவர் அல்ல.
முன்னதாக சுந்தராஜு, மலேசிய EcoWorld நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், துணைத் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பதவி வகித்து வந்தார். அதற்கு முன்பு, எஸ்.பி செத்தியா குழுமத்தின் சொத்துப் பிரிவின் (வடக்கு) பொது மேலாளராகவும் பணியாற்றினார். சுந்தராஜூ 31 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவின் சொத்து துறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது மறுப்பதற்கில்லை.
அவர் ஏழ்மையான தொடக்கத்திலிருந்து வந்தவர். குடும்பத்தை நடத்துவதற்கும் தனது கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்கும் இரண்டு வேலைகள் செய்ததாக, சுந்தராஜு கூறினார்.
“நான் காலையில் பாதுகாவலராகவும், இரவில் வாடகைக் கார் (டாக்ஸி) ஓட்டுநனராகவும் வேலை செய்ய வேண்டியிருந்தது,” என்று சுந்தராஜு மேற்கோள் காட்டினார்.
சுந்தராஜூ வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் துறையின் ஆட்சிக்குழு உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டார்.
பினாங்கு மாநில அரசாங்கத்தின் புதிய 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியல் பின்வருவன:

மேதகு சாவ் கொன் இயோவ்
நிதி, பொருளாதாரம், நிலம், தகவல் தொடர்பு மேம்பாடு

பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் அப்துல் ஹாமிட்
இஸ்லாமிய சமய மேம்பாடு, கல்வி, உயர் கல்வி மற்றும் சமூக ஒற்றுமை

ஜக்டிப் சிங் டியோ
மனித வள மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

ரஷிடி ஸினோல்
வாணிகம், தொழில்முனைவோர் மற்றும் புறநகர் மேம்பாடு

சாய்ரீல் கீர் ஜொஹாரி
உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் மேம்பாடு

வோங் ஹோன் வாய்
சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரம்

லிம் சியூ கிம்
சமூக நல மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகாரம்

ஹிங் மோய் லாய்
ஊராட்சி, நகர் & புறநகர் திட்டமிடல்

கூய் ஸி சென்
இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதாரம்

டத்தோ ஸ்ரீ சுந்தராஜு
வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல்

பாமி ஜாய்னுல்
வேளாண் தொழில்நுட்பம் & உணவு உத்தரவாதம் மற்றும் கூட்டுறவு மேம்பாடு