பினாங்கு இந்தியர் சங்கத்தின் சமூகநலத் திட்டங்கள் தொடரட்டும் – பேராசிரியர்

பாகான் ஜெர்மால் – அண்மையில் பினாங்கு இந்தியர் சங்கத்தின் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழாக் கண்டது. பினாங்கு இந்தியர் சங்கம் இந்தியர்களின் சமூகம் மற்றும் அவர்களின் மேம்பாட்டிற்காகப் பல அரிய திட்டங்களை மேற்கொண்டு வருவது சாலச்சிறந்தது.

நிகழ்வில் வரவேற்பு உரையாற்றிய இரண்டாம் துணை முதல்வர் 95-ஆண்டுகளாக இந்தியர் சங்கம் இந்தியர்களின் மேம்பாட்டிற்கு அயராது பாடுப்பட்டு வருவதை மனதார பாராட்டினார். வருங்காலங்களில் இச்சங்கம் ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்து இந்திய சமுதாயத்திற்கு வள்ர்ச்சிக்கு வழி வகுக்கும் என பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி நம்பிக்கை தெரிவித்தார். எதிர்காலத்தில் அதிகமான திட்டங்களை மேற்கொள்வதன் வழி சமூக ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை மேலோங்க செய்ய முடியும் என வலியுறுத்தினார்.

பினாங்கு மாநில அரசு 2008-ஆம் ஆண்டு தொடங்கி இந்தியர்களின் நலனுக்காக பல மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து, மாநில முதல்வர் மேதகு சாவ் இந்தியர் சங்கத்தின் பல்நோக்கு மண்டபம் அமைக்க கொன் யாவ் உதவிக்கரம் நீட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்புதிய பொது மண்டபம் பிரத்தியேகமாக அவ்வட்டார இந்தியர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இப்பல்நோக்கு மண்டபம் பொது நடவடிக்கைகள், கூட்டங்கள், கேளிக்கை நிகழ்வு போன்றவற்றை மேற்கொள்ள ஏதுவாக அமையும். தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் , பிலிப்பின்ஸ் நாட்டில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய விளையாட்டு( சீ விளையாட்டு) அம்பு ஏய்தல் போட்டியில் தங்கம் வென்ற விளையாட்டு வீரர் கம்பேஸ்வரனுக்கு நினைவுச்சின்னம் வழங்கி பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கௌரவித்தார். இந்தியர்கள் தொடர்ந்து விளையாட்டுத் துறையில் சாதனை புரிய இம்மாதிரியான வெற்றிகள் மையக்கல்லாக அமையும் என புகழாரம் சூட்டினார்.

இந்நிகழ்வில் பினாங்கு இந்தியர் சங்கத் தலைவர் லிங்கநாதன் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களுக்கு பொன்னாடைப் போற்றி மரியாதை செய்தார். இந்நிகழ்வில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, பினாங்கு இந்தியர் சங்கச் செயலாளர் கலைக்குமார், அதன் உறுப்பினர் டத்தோ குவனராஜு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.