பினாங்கு செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மாணவர்கள் அனைத்துலக அரங்கில் சாதனை

International Debate Education Association (IDEA) எனப்படும் அனைத்துலகச் சொற்போர் கல்வியியல் கழக ஏற்பாட்டில் நடந்தேறிய ஆசிய இளையோருக்கான கருத்துக்களம் 2012-இல் பங்குபெற்று பினாங்கு செயிண்ட் ஜார்ஜ் இடைநிலைப் பள்ளி மாணவர்களான செல்வி அம்சவாணி திலிப் குமார், செல்வி யுஹனிஸ் அப்துல் மாலிக், செல்வி கெரென் கொர்  பிரேம்ஜிட் சிங் ஆகியோர் சாதனை புரிந்துள்ளனர்.

கடந்த மே மாதம் பேங்காக் தாய்லாந்தில் நடைபெற்ற இந்தச் சொற்போர் வகையகம் ‘ஆசியாவில் இடப்பெயர்வு’ என்னும் கருப்பொருளில் நடந்தேறியது. இச்சொற்போர் பல பிரிவுகளில் இரண்டு வாரங்களுக்கு நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் ‘Karl Popper’ என்று அழைக்கப்படும் சொற்போரில் செல்வி யுஹனிஸ் அப்துல் மாலிக் 78 பேச்சாளர்களில் ஆறாவது சிறந்த பேச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைப் போல குழு முறையிலான சொற்போரில் செல்வி அம்சவாணி திலிப் குமார்  66 பேச்சாளர்களில் எட்டாவது சிறந்த பேச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனைத்துலக அரங்கில் பினாங்கு, மலேசியாவைப் பிரதிநிதித்து மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்த இம்மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் மாண்புமிகு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் அவர்களுக்கு ரிம 200 பாராட்டுத் தொகையும் நற்சான்றிதழும் வழங்கி தொடர்ந்து பல போட்டிகளில் பங்குபெற்று வெற்றி மாலைகளைச் சூடத் தம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். வெற்றி பெறாவிடினும் இச்சொற்போரில் பங்கு பெற்ற செல்வி கெரன் கொர் அவர்களுக்கு ரிம100 ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, இம்மாணவர்களின் ஆலோசகர்களான ஆசிரியர் சொங் சிங் ஃபுங் மற்றும் கமல வேணி அவர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. செயிண்ட் ஜார்ஜ் பள்ளிக்கு ரிம 200-உம் நற்சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.