ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், இம்மாநிலத்தின் அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் மொத்தம் 70 குளிரூட்டிகளும் 1,000 மலாய் மொழி பயிற்சிப் புத்தகங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன.

மாநிலத்தில் உள்ள அனைத்து 28 தமிழ்ப்பள்ளிகளையும் உள்ளடக்கி, மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கம் (MICCI) பினாங்கு இந்த குளிரூட்டிகளை வழங்கியது; ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தபட்சம் இரண்டு யூனிட்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி கொம்தார் அரங்கத்தில் நடைபெற்றது.

வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு தமிழ்ப்பள்ளிகளுக்கு
நன்கொடைகளை எடுத்து வழங்கினார்.

தனது உரையின் போது, MICCI பினாங்கு சங்கத்தைச் சேர்ந்த 10 தொழிலதிபர்களின் பங்களிப்புகளின் மூலம் சுமார் ரிம100,000 செலவில் செயல்படுத்தப்பட்ட பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) முன்முயற்சி திட்டம், மாணவர்களுக்கு மேலும் வசதியான மற்றும் சிறந்த கற்றல் சூழலை உருவாக்க உதவியுள்ளது என சுந்தராஜூ தெரிவித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட 28 தமிழ்ப்பள்ளிகளில் உள்ள 853 ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக் குழு 1,000 மலாய் மொழி பயிற்சிப் புத்தகங்களையும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

“மாணவர்களிடையே தேசிய மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் புத்தகங்கள் மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் (UPM) மூலம் வெளியிடப்பட்டு, முன்னணி மலாய் மொழி நிபுணரான பேராசிரியர் டாக்டர் விஜயலட்சுமி சுப்ரமணியம் மற்றும் அவரது குழுவினரால் எழுதப்பட்டுள்ளன.

“பினாங்கு மாநில அரசாங்கம், தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழுவின் மூலம், மலாய் மொழி மேம்பாட்டுத் திட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டிற்கு ரிம50,000 நிதியை ஒதுக்கியுள்ளது. இதில், பயிற்சிப் புத்தகங்களை வாங்குவதற்காக குறிப்பாக ரிம30,000 ஒதுக்கப்படுள்ளது.

“மேலும், பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்குத் தேவையானவற்றை பெற்றுத் தருவதற்கும், 2026 ஆம் ஆண்டிற்காக மாநில அரசு ரிம2.1 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது,” என்று பிறை மாநில சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன்; செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன்; பினாங்கு மாநில கல்வித் துறை (JPN) இயக்குநர் ஹுசைமி கசாலி; பினாங்கு மாநில ம.இ.கா தலைவரும் இந்து அறப்பணி வாரிய ஆணையருமான டத்தோ தினகரன்;
செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர்கள் லிங்கேஸ்வரன் மற்றும் பொன்னுதுரை; பினாங்கு MICCI தலைவர் டத்தோ எஸ். பார்த்திபன்; பினாங்கு தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றத் தலைவரும் பழனியாண்டி தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான செல்வகுமார் உள்ளிட்டோர் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கல்வி மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதில், குறிப்பாக மாணவர்களின் நலனுக்காக கற்றல் வசதிகளை மேம்படுத்துவதில் காட்டிய அர்ப்பணிப்பிற்காக, MICCI பினாங்கு சங்கத்திற்கு சுந்தராஜூ தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
பினாங்கில் கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, இதுபோன்ற முயற்சிகளை மற்ற பெருநிறுவனங்களும் தொழில்முனைவோர் அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
“இந்த இரண்டு பங்களிப்புகளுக்கும் ஒரே குறிக்கோள்தான் உள்ளது; அது மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் தரமான, வசதியான மற்றும் பாதுகாப்பான கல்வி பெறுவதை உறுதி செய்வதாகும்.
“தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு வசதி மற்றும் உதவிகளும், அதிக தன்னம்பிக்கை, அறிவு மற்றும் போட்டித்தன்மை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவதில் முக்கியமான படியாகும்,” என்று அவர் கூறினார்.