பினாங்கு பசுமைக் கண்காட்சி 2012

மாநில அரசும் பினாங்கு பசுமை மன்றமும் ’Penang Green Council’ இணைந்து இரண்டாம் முறையாக ஏற்பாடு செய்த பினாங்கு பசுமைக் கண்காட்சி கடந்த செப்டம்பர் 22-ஆம் திகதி பினாங்கு அனைத்துலக விளையாட்டரங்கில் மிக விமரிசையாக நடைபெற்றது. “எதிர்காலத்திற்குப் பாதுகாப்போம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இக்கண்காட்சியில் 63 பங்கேற்பாளர்களும் 3 பசுமைப் பள்ளிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.  இரண்டு நாள் நடைபெற்ற இக்கண்காட்சியில், பசுமைத் தொழில்நுட்பக் கண்காட்சி, பசுமை நிழற்படப் போட்டி, வர்ணம் தீட்டும் மற்றும் ஓவியம் வரையும் போட்டி, மேடைப் படைப்பு, மறுபயனீட்டுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆடை அலங்காரப் போட்டி, புதையல் தேடும் போட்டி எனப் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து, பார்வையாளர்களைப் பசுமைத் திட்டங்களில் கவரும் வகையில் ரிம 40,000 பெருமானமுள்ள அதிர்ஷ்டக் குழுக்கல் பரிசுகளும் வழங்கப்பட்டன. அதுமட்டுமன்றி பசுமைக் கண்காட்சியின் வருகையாளர்களுக்குச் சுமார் 2,500 மரக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இக்கண்காட்சியின் முக்கிய அங்கமாக அலுவலகப் பணியாளர்களுக்குக் குறைந்த கரியமிலம் கொண்ட தூய்மையான, ஆரோக்கியமான பணிச் சூழலை உருவாக்கும் நோக்கில் பினாங்கு பசுமை அலுவலகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தூய்மையான, பாதுகாப்பான, மற்றும் பசுமை தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் மாநிலமாகப் பினாங்கை நிலைநிறுத்த வேண்டுமென்ற பினாங்கு பசுமை மன்றத்தின் தலையாய நோக்கத்தின் வெளிப்பாடாகக் கல்வியின் வழி பசுமை அலுவலகக் கோட்பாட்டைப் பின்பற்றுவதுடன் அலுவலகங்களில் பசுமை முயற்சிகளைச் செயற்படுத்துவதே இந்தப் பினாங்கு பசுமை அலுவலகச் சான்றிதழ் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகக் கருதப்படுகிறது. இத்திட்டத்தின் தொடக்க விழாவின் போது மக்கள் எஸ் பி செத்தியா வடிவமைத்துக் கட்டிய பசுமை அலுவலகக் கருப்பொருளைக் கொண்ட மாதிரி அலுவலகத்தைக் கண்டு இரசித்தனர்.

மேலும், இத்திட்டத்தில் பங்கு கொண்ட முதல் 1000 அலுவலகப் பிரதிநிதிகளுக்குத் தொடக்கக் கருவிப் பெட்டிகள் வழங்கப்பட்டது. இத்தொடக்கக் கருவிப் பெட்டிகளுக்கு முதன்மை ஆதரவாளர்களாகக் கொனிக்கா மினொல்டா மற்றும் தெட்ரா பாக் நிறுவனங்கள் திகழ்ந்தன. அரசாங்கத் துறையைச் சேர்ந்த அனைத்து அலுவலகங்கள் உட்பட தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பதிவு பெற்ற தொழிற்சாலைகள், வங்கிகள், பேரங்காடிகள், தங்கும் விடுதிகள் போன்ற நிறுவனங்களும் இத்திட்டத்தில் பங்குபெற்று சான்றிதழ் பெற வரவேற்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் அலுவலகங்கள் முதலில் www.pgc.com.my  என்னும் அகப்பக்கத்தில் உள்ள இணைய மதிப்பீட்டில் பங்குபெற்றுத் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பிறகே அவை தளத் தணிக்கைக்குத் ( site audit ) தகுதி உடையதாகின்றன. இத்தளத் தணிக்கைக்கான முதலாம் ஆண்டு நிர்வாகக் கட்டணம் ரி.ம 300 ஆகும். இத்திட்டத்தின் வழி  அலுவலகங்கள் நற்சான்றிதழையும் கோப்பையையும் பெறுவதோடு அலுவலகச் செயற்பாட்டுச் செலவுகளைப் பெரும்பான்மையாகக் குறைக்க முடியும். தூய்மையான பசுமையான பினாங்கு என்ற கருப்பொருளுக்கு வலு சேர்க்கும் வகையில் இத்திட்டம் அலுவலகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அலுவலகங்களில் மறுபயனீடு செய்யப்பட்ட பசுமைப் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கையில் அதனை உருவாக்கும் தொழில் வாய்ப்புகளும் அதிகரிக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.

பசுமைத் தொழில்நுட்பங்களை ஆதரிக்கும் பினாங்கு மாநில அரசின் பசுமை முயற்சிகளை வெற்றி பெறச் செய்வதில் பயனீட்டாளர்கள், வணிகர்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியோரின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிக அவசியம். மேலும், எதிர்காலத்தின் வளமான உலக வாழ்க்கையை உறுதி செய்ய நாம் இப்பொழுதிலிருந்தே சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் மரியாதைக்குரிய திரு பீ போன் போ தொடக்க விழாவின் போது தம் உரையில் வலியுறுத்தினார். அவருடன், சட்டமன்ற உறுப்பினர்களான, தெ ஈ சியு. இங் வெய் எய்க், பினாங்கு செபெராங் பிறை நகராண்மைக் கழகத் தலைவர், பினாங்கு பசுமைக் கண்காட்சியின் ஆதாரவாளர்கள், பார்வையாளர்கள் என சுமார் 3000 பேர் இக்கண்காட்சியில் பங்கு பெற்றுச் சிறப்பித்தனர்.

இயற்கையை நேசிப்போம்! பசுமைத் திட்டங்களை ஆதரிப்போம்!