பினாங்கு பசுமை கழக ஏற்பாட்டில் புகைப்படப் போட்டி

பினாங்கு மாநில சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அமைப்பாகத் திகழும் பினாங்கு பசுமை கழக ஏற்பாட்டில் இரண்டாவது முறையாகப் புகைப்பட போட்டி நடைப்பெறவுள்ளது. இப்போட்டி பினாங்கு பசுமை கண்காட்சி மற்றும்  பினாங்கு புகைப்பட வலையமைப்பு சங்க ஆதரவோடு இணைந்து நடத்தப்படுகிறது. மேலும் இப்போட்டிக்கு எக்சல் புகைப்பட வர்த்தகமும் நிக்கோன் நிறுவனமும் இணைஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் கருப்பொருள் “IM HEALING THE EARTH” என்பதாகும்.

மலேசியாவின் எழில்மிகு சுற்றுச்சூழலை சித்தரிப்பதே  இந்த புகைப்படப் போட்டியின் முதன்மை நோக்கமாக அமைவதாக  பினாங்கு பசுமை கழகத்தின்  இயக்குநரும் பினாங்கு பசுமை கண்காட்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் தே யே சீயு தெரிவித்தார்.

இப்போட்டியில் அனைத்து மலேசிய குடிமக்களும் கலந்து கொள்ள வரவேற்கப்படுகின்றனர். இப்புகைப்படங்கள் இந்நாட்டிலே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதோடு, போட்டியாளர்கள் புகைப்படத்தை புகைப்பட தாளில் அச்சிடப்பட்டு அதாவது (5R) (5″×7″ அல்லது 127 ×178mm) என்ற அளவுக்கோலைப் பயன்படுத்தி பதிவுகளை அஞ்சல் வழியாக அல்லது பினாங்கு பசுமை கழகத்தினரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பணம்,  நிகோன் வகை நிழற்படக் கருவி, மற்றும் அதன் துணைக்கருவிகள் உட்பட ரிம 6000-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

புகைப்படப் போட்டியின் ஏற்பாட்டுக் குழுவினருடன் தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் தே யே சீயு (நடுவில்) புகைப்பட போட்டியின் துண்டுப்பிரசுரங்களைக்  காண்பிக்கின்றனர்.
புகைப்படப் போட்டியின் ஏற்பாட்டுக் குழுவினருடன் தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் தே யே சீயு (நடுவில்) புகைப்பட போட்டியின் துண்டுப்பிரசுரங்களைக்              காண்பிக்கின்றனர்.                                                                                                                                                                                                                                                                                                       

வெற்றியாளர்கள் தொழில்நுட்ப தரம், படத் தொகுப்பு மற்றும் அசல் அடிப்படையில் திறன்முக்க நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப்படுவர். பினாங்கு பசுமை கண்காட்சியில் இந்த  போட்டியின் புகைப்படப் பதிவுகள் அனைத்தும்  கண்காட்சிக்கு வைக்கப்படும். இப்போட்டியின் இறுதி நாள் வரும் 30-8-2013 ஆகும்.