பினாங்கு மாநகர் மேயராக டத்தோ இராஜேந்திரன் அந்தோணி நியமனம்

Admin

ஜார்ச்டவுன் – கடந்த மே,5-ஆம் தேதி டத்தோ இயூ துங் சியாங் கட்டாய ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) 4வது மேயராக டத்தோ Ir.இராஜேந்திரன் இன்று நியமிக்கப்பட்டார்.

முன்னாள் மாநகரச் செயலாளரான டத்தோ Ir.இராஜேந்திரன் எம்.பி.பி.பி இன் டத்தோ பண்டார் பதவிப் பிரமாணத்தை முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் முன்னிலையில் எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், முதலாம் துணை முதலமைச்சர் டத்தோ அஹ்மத் ஜாக்கியுடின் அப்துல் ரஹ்மான்; இரண்டாம் துணை முதலமைச்சர், பேராசிரியர் ப.இராமசாமி; வீடமைப்பு உள்ளாட்சி, கிராமம் & நகர்ப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ மற்றும் மாநிலச் செயலாளர் டத்தோ முகமட் சாயுத்தி பாக்கர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சில மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

டத்தோ ​​இராஜேந்திரன் அனுபவத்திலும், மாநகர் நிர்வாகத்தின் அனைத்து பங்குதாரர்களுடனும் நட்புறவான அமைப்பாக எம்.பி.பி.பி-ஐ வழிநடத்தும் திறன் கொண்டவர், என
கொன் இயோவ் தனது உரையின் போது நம்பிக்கைத் தெரிவித்தார்.

எம்.பி.பி.பி இன் சேவை வழங்களின் தரத்தை மேம்படுத்துவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் டிஜிட்டல் உருமாற்றத் திட்டம் மேம்படுத்தப்படும், என்று இராஜேந்திரன் தெரிவித்தார்.

“இந்த உயர் தாக்கத் திட்டம் மூலம், முதலீட்டுப் பட்டியலில் உலகின் சிறந்த நிலைக்கு பினாங்கு மாநிலத்தை உயர்த்த முடியும்,” என்று டாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் முன்னாள் மேயர் டத்தோ துங் சியாங் அவர்களின் சேவையைப் பாராட்டி இவ்வாறு கூறினார்.

இராஜேந்திரன் தலைமைத்துவத்தின் கீழ் எம்.பி.பி.பி நிர்வாகம் பினாங்கு2030 இலக்கின் அடிப்படையில் பினாங்கு மாநிலத்தை அனைத்துலக தரம் கொண்ட மாநகரமாகத் தொடர்ந்து வழிநடத்த முடியும்; இருப்பினும் 4வது எம்.பி.பி.பி மேயரின் நிர்வாகப் பணி முந்தைய காலத்திலிருந்து வேறுபட்டிருக்கலாம் என முதலமைச்சர் கூறினார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்தீப் தனது உரையில், அனைத்து எம்.பி.பி.பி கவுன்சிலர்களும் இராஜேந்திரன் நிர்வாகத்திற்கு முன்பு துங் சியாங் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது போல தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“ஒரு குழு முறையில் வேலை செய்யாத வரை வெற்றியை அடைய முடியாது.

எம்.பி.பி.பி டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியைப் பின்பற்றி வருவதாகவும், மாநகரின் நிர்வாகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராஜேந்திரன் கூறினார்.

அவரது கூற்றுப்படி, 112 எம்.பி.பி.பி வரி செலுத்தும் பரிவர்த்தனைகளை மின் கட்டணம் மூலம் மேற்கொள்ள முடியும். அதே நேரத்தில், 2023 ஆண்டில் எம்.பி.பி.பி 86% ரொக்கமற்ற பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது.

மேலும், பருவநிலை மாற்றம் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்த
பிரச்சனைகளைக் கையாள்வதற்கானத் தொடர்புடையத் திட்டங்களையும் தனது நிர்வாகம் மேம்படுத்தும் என்றும் இராஜேந்திரன் கூறினார்.

இராஜேந்திரன் தனது 23 வயதில் அதாவது ​​1986 ஆண்டில் எம்.பி.பி.பி பொறியியலாளராகப் பணியில் சேர்ந்தார் என்று அறியப்படுகிறது.

எம்.பி.பி.பி இல் தனது 37 வருட சேவையின் போது, ​​இராஜேந்திரன் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற (PBT)பொறியியல் துறை இயக்குநராகவும், மாநகர் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது பாராட்டக்குரியது.