பினாங்கு மாநிலத்தில் நகர்ப்புற வேளாண்மை மேம்படுத்த 100 சமூகத் தோட்ட மையங்களை உருவாக்க இலக்கு – முதல்வர்

Admin

டத்தோ கெராமாட் – மாநில அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகர்ப்புற வேளாண்மையை மையமாக கொண்ட 100 சமூகத் தோட்ட மையங்களை உருவாக்க இலக்கு கொண்டுள்ளது.

மாநில முதல்வர் சாவ் கொன் யாவ், வேளாண்மை துறையில் ‘சமுதாய வேளாண்மை’ (community farming) திட்டத்தில் நிபுணத்துவம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை உட்செலுத்துவதன் மூலம் இதனை மேம்படுத்த பிரகாசமான வாய்ப்புகள் காணப்படுவதாகக் கூறினார்.
“சமூகத் தோட்டம் உருவாக்குவதன் மூலம் அருகிலுள்ள பி40 சார்ந்த குழுவினர் பயிர்களின் விளைச்சல்களை எளிதில் பெற முடியும் என்பது மாநில அரசின் இலக்காகத் திகழ்கிறது.

“அருகிலுள்ள சமூகங்களுக்கு குறுகிய கால பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும், குறிப்பாக குறைந்த வருமானம் பெறுநர்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே தினசரி அல்லது மாதாந்திர வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் இத்திட்டம் வழிவகுக்கும்.

“இந்த நகர்ப்புற வேளாண்மை திட்டத்தை ஆதரிக்கும் வகையில் 100 சமூகத் தோட்ட மையங்களை உருவாக்கும் பொருட்டு மாநில துறைகள் மற்றும் முகவர் நிறுவனங்களும் கரிம காய்கறி நடும் நடவடிக்கை திட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்,” என மாநில அரசு வலியுறுத்துகிறது.

“இத்திட்டம் வரிசை முறையில் நடவுச் செய்தல், ‘வெர்த்திக்கல் அக்வாபோனிக்’, பொருளாதார கழிவு தயாரிக்கும் உர இயந்திரம் போன்ற மாதிரியைக் கொண்டு பி.டி.எல் பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சமூகத் தோட்டம் தொடக்க ஆய்வுக்களமாகவும் முன்மாதிரித் திட்டமாகவும் செயல்பட்டு மாநில அரசின் காலி நிலங்களில் சமூகத் தோட்டங்கள் உருவாக்க துணைபுரியும்,” என பினாங்கு டிஜித்தல் நூலகத்தில் நடைபெற்ற சமூகத் தோட்டம் தொடக்க விழாவில் கலந்து கொண்டு இவ்வாறு முதல்வர் கூறினார்.

வீட்டுவசதி, உள்ளாட்சி துறை மற்றும் நகர்ப்புற & கிராமப்புற மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ; சுற்றுலா, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் இன்; பாரதி (பினாங்கு முதலமைச்சர் வாரியத்தின் துணை பொது மேலாளர், சி.எம்.ஐ); ஹம்தான் அப்துல் மஜீத் (திங்க் சிட்டி நிர்வாக இயக்குனர்) மற்றும் பேராசிரியர் டாக்டர். மொஹமட். ஜாகுரி கைரானி (கலை, கணினி மற்றும் படைப்புத் துறை தலைமை அதிகாரி, யு.பி.எஸ்.ஐ) ஆகியோர் வருகையளித்தனர்.

இத்திட்டம் சி.எம்.ஐ, திங்க்சிட்டி மற்றும் யு.பி.எஸ்.ஐ என 4 பி (பொது தனியார் நிபுணத்துவ கூட்டு) ஒத்துழைப்பு முயற்சியில் மலர்ந்துள்ளன. பினாங்கு டிஜித்தல் நூலகத்தில் அமைந்துள்ள இந்த சமூகத் தோட்டத் திட்டம் செயல்படுத்த திங்க்சிட்டி ரிம 35000 நிதியுதவி வழங்கியுள்ள வேளையில் யு.பி.எஸ்.ஐ இத்திட்டத்தின் நிபுணத்துவ சலுகைகளை வழங்கியுள்ளது.

இதற்கிடையில், இத்தோட்டத்தை வெற்றிகரமாக உருவாக்க மாநில வேளாண்மைத் துறை நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

பினாங்கு டிஜித்தல் நூலகப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள அறுவடை விளைச்சல்கள் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் சுமார் 400 குடும்பங்களுக்கு பயனளிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் மாநில முதல்வர் சாவ் கூறுகையில், 2,000 கி.பீ (சதுர அடி) குறைவான நிலப்பரப்பில் பயிரிடப்பட்டால், பெறப்படும் அறுவடை 60:40 என்ற விகிதத்திற்கு ஏற்ப விநியோகிக்கப்படும். அதில் 60 சதவீதம் பி40 குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

“இந்த பயிரின் விளைச்சல்கள் பினாங்கு மாநிலத்தில் உள்ள முத்தியாரா உணவு வங்கி திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு அருகிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பி40 குழுவினரை சார்ந்த வசதிக்குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

“இது தவிர, இந்த திட்டத்தின் சுவாரஸ்யமான அணுகுமுறைகளில் ஒன்று மாநிலத்தில் உணவு பாதுகாப்பை துரிதப்படுத்துவதாகும், ”என்று விளக்கினார்