பினாங்கு மாநிலம் வரலாறு காணாத சிறந்த பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்தது

2011-ஆம் ஆண்டின் கணக்குத் தணிக்கை அறிக்கையின்படி மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ்ச் செயல்படும் கெடா, சிலாங்கூர், கிளந்தான், பினாங்கு ஆகிய நான்கு மாநிலங்களும் சிறப்பான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அவற்றில் 2010-ஆம் ஆண்டைக் காட்டிலும் 47% அதாவது ரிம 192 மில்லியன் கூடுதல் வருமான வரி வசூலிப்பைப் பெற்ற பினாங்கு மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

இந்த வருமானத்தின் மூலம் பினாங்கு மாநில அரசின் மிகை நிதி ரிம 105 மில்லியன் அதாவது 312% உயர்வு கண்டு மாபெரும் சாதனை புரிந்துள்ளது. பினாங்கு மாநில அரசின் வரலாற்றில் இதுவே முதன் முறையாக மக்கள் கூட்டணி அரசின் கீழ்ச் செயல்படும் அரசு அதிகபடியான மிகை நிதியைப் பதிவு செய்துள்ளது. பினாங்கு மாநில மக்களின் அயராத உழைப்பும் மாநில அரசு நிர்வாக உறுப்பினர்களின் குழு ஒற்றுமையும்தான் இந்த வெற்றிக்குக் காரணம் என மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் புகழாரம் சூட்டினார். ஆற்றல் பொறுப்பு, வெளிப்பாடு என்னும் தாரக மந்திரத்தைப் பின்பற்றி ஆட்சி நடத்தும் மக்கள் கூட்டணி அரசின் வருமானம் ரிம 411 மில்லியனிலிருந்து ரிம 603 மில்லியனுக்கு உயர்வு கண்டதைத் தொடர்ந்து அதன் மிகை நிதி ரிம 33 மில்லியனிலிருந்து ரிம 138 மில்லியனுக்கு உயர்வு பெற்றுள்ளது.

பினாங்கு மாநில அரசின் நிர்வாகச் செலவினம் 2010-ஆம் ஆண்டில்  ரிம 377 மில்லியனிலிருந்து 2011-ஆம் ஆண்டில் ரிம 465 மில்லியன் அதாவது ரிம 88 மில்லியன் அதிகரித்த போதிலும் மிக உயர்ந்த மிகை நிதியைப் பதிவு செய்தது பினாங்கு மக்கள் கூட்டணி அரசுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி எனக் கூறினார். அதுமட்டுமன்றி முதல் தடவையாகப் பினாங்கின் மிகை நிதி ரிம100 மில்லியனுக்கு மேல் தொட்டிருப்பது பெருமைக்குரிய விடயம் என்றார். தொடர்ந்து, பிரதமர் துறை அமைச்சரான டத்தோ ஸ்ரீ நஜ்ரி அஜிஸ் சிறந்த நிதி நிர்வாகத்தைக் கொண்டு மாநில அரசின் வருமான வசூலிப்பை 47% உயர்வுபடுத்தியதற்குத் தம் வாழ்த்தினையும் பாராட்டினையும் மலேசியா டூடே இணையம் வழி தெரிவித்தமைக்கும் மாநில அரசு சார்பாக முதல்வர் தம் நன்றியினை வெளிபடுத்தினார்.

பினாங்கு வரலாற்றுப் பதிவில் பொருளாதாரச் சாதனை புரிந்து முத்திரை பதித்த பினாங்கு மக்கள் கூட்டணி அரசுக்கு வாழ்த்துத் தெரிவிக்க பெர்மத்தாங் பௌ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மரியாதை நிமித்தம் முதல்வர் அலுவலகத்திற்கு அண்மையில் வருகை மேற்கொண்டார். மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் தலைமையில் செயல்படும் மக்கள் நலன் பேணும் மாநில அரசு சிறந்த நிதி நிர்வாகத்தை மேற்கொண்டு அதிக வருமானத்தைப் பெற்றிருப்பது பெருமைக்குரிய விடயம் என்று கருத்துரைத்தார். மேலும், நேரடியாக மாநில அரசுக்குத் தம்  வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கவே தாம் இங்கு வருகை மேற்கொண்டதாகவும் தாம் பினாங்கு மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகத் திகழ்வதில் மிகுந்த பெருமை அடைவதாகவும் கூறினார்.

553566_516394445057328_234813539_nபெர்மத்தாங் பௌ நாடளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (நடுவில்) மாண்புமிகு லிம் குவான் எங்குடன்

கைக் குழுக்கி வாழ்த்துத் தெரிவிக்கிறார். அவர்களுடன் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள்.

 

அதே வேளையில், மாநில அரசின் கீழ்ச் செயல்படும் நான்கு துறைகள் தேசிய கணக்காய்வுத் துறையின் நான்கு நட்சத்திரம் கொண்ட விருதைப் பெற்றன. மாநில அரசின் செயலாளர் அலுவலகம், மாநில நிதித் துறை, பினாங்கு இஸ்லாமிய மத மன்றம், பினாங்கு மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் சேவைகளைப் பாராட்டி முதல்வர் லிம் குவான் எங் ரிம10,000 ஊக்குவிப்புத் தொகை வழங்கி சிறப்பித்தார். மேலும், அடுத்த ஆண்டு முதல், தேசிய கணக்காய்வுத் துறையிடமிருந்து இதே போன்று அங்கிகாரம் பெறும் துறைக்கு      ரிம 15,000 ஊக்குவிப்புத் தொகை வழங்க மாநில ஆட்சிக்குழு சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது எனவும் கூறினார்.

இதனைத் தவிர, தேசியக் கணக்காய்வு அறிக்கையின்படி பினாங்கு மாநிலம் குறைந்த கடன் தொகையைப் பதிவு செய்துள்ளது. அதாவது, மத்திய அரசிடமிருந்து பெற்ற கடன் தொகையில் இன்னும் செலுத்தப்படாமல் இருக்கும் பினாங்கு மாநிலத்தின் நிலுவைத் தொகை ரிம 2.59 மில்லியன் ஆகும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகக் குறைவான கடன் தொகையை வைத்திருக்கும் பினாங்கு மாநிலம் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலும், மிக அதிகமான அதாவது ரிம836.30 மில்லியன் கடன் தொகையைச் செலுத்தாமல் இருக்கும் கெடா மாநிலம் முதலிடத்திலும் இருக்கின்றன. நாட்டுப் பிரதமரும் நிதி அமைச்சருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அதிகமான கடன் தொகையை வைத்திருக்கும் மாநிலங்கள் தங்கள் கடனைத் தீர்க்க வியூக வழிகளை ஏற்படுத்தித் தந்து உதவ வேண்டும் எனப் பினாங்கு முதல்வர் கேட்டுக் கொண்டார்.