பிறை – பொது மக்களின் சமூக நலன் மற்றும் நல்வாழ்வுக்கான மாநில அரசின் உறுதிப்பாட்டை முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் மீண்டும் உறுதிப்படுத்தினார். பினாங்கின் தங்கத்திட்டமான i-sejahtera திட்டம் தொடர்ந்து வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இன்று பிறை மாநிலத் தொகுதி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பேசிய சாவ், இந்த மாத இறுதியில் வரவிருக்கும் பினாங்கு வரவு செலவு திட்டத்தைத் தாக்கல் செய்ய மாநில அரசு தயாராகி வரும் நிலையில், மக்களுக்கான சமூக நலத் திட்ட ஒதுக்கீடுகள் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறினார்.
“I-sejahtera மற்றும் பிற உதவித் திட்டங்கள் மூலம் எங்கள் மக்களின் நலனுக்கு நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம்,” என்றார்.
பினாங்கு, குடும்பத்தை மையமாகக் கொண்ட, பசுமையான மற்றும் புத்திசாலித்தனமான மாநிலத்தை தேசத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், 2030 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குப் பார்வையை நோக்கி முன்னேறிச் செல்லும் வேளையில், யாரும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள இந்து சமூகத்தினருக்கு, குறிப்பாக பிறை பகுதியில் உள்ளவர்களுக்கு, தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
“இந்தப் பண்டிகையை நம் அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையைக் கொண்டுவரட்டும்.
“நமது சமூகத்தை வரையறுக்கும் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் உணர்வில் இந்த மாலைப் பொழுதை ஒன்றாகக் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவர் கூறினார்.

பினாங்கின் பலம், பல்வேறு வேறுபாடுகளுக்கிடையேயும் நிலைத்திருக்கும் ஒற்றுமையில்தான் உள்ளது.
“பல்வேறு இனங்கள் மற்றும் நம்பிக்கைகளைச் சேர்ந்த மக்கள் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் ஒன்றாக வாழ்கிறார்கள், இதுவே பினாங்கின் உண்மையான சாராம்சமாகும், இதை நாம் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டும்,” என்று சாவ் கூறினார்.
மாநில அரசு, உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் சமூகத்திற்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு காரணமாக, பிறை தொடர்ந்து ஊக்கமளிக்கும் வளர்ச்சியைக் கண்டு வருவதாக அவர் எடுத்துரைத்தார்.
இதனிடையே, உள்ளூர் அரசாங்க மேம்பாட்டு அமைச்சு (KPKT) நிதியளிக்கப்பட்ட ரிம18 மில்லியனுக்கும் மதிப்புள்ள பல பொது உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அடங்கும். இதில் சந்தை மேம்பாடுகள், புதிய வடிகால் அமைப்புகள், பூங்கா பராமரிப்பு மற்றும் பொது பாதுகாப்பு வசதிகள் ஆகியவை அடங்கும்.
கூடுதலாக, பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கைச் சூழல்களை உறுதி செய்வதற்காக, ரிம20 மில்லியனுக்கும் அதிகமான தொகையில் தொடர்ச்சியான அடுக்குமாடி வீட்டு பராமரிப்பு மற்றும் சமூக வசதி மேம்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன.
‘Kasih Prihatin’, ‘Sayangi Pelajar Perai’ போன்ற சமூக நலத் திட்டங்களையும், குடியிருப்பாளர்களிடையே சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்தும் பல்வேறு பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை முயற்சிகளையும் தொடர்ந்து ஊக்குவித்து வருவதில் பிறை சேவை மையம் முன்னணி வகிக்கிறது.
“இந்த முன்முயற்சிகள் பினாங்கு2030 இலக்கின் உணர்வை உண்மையிலேயே வெளிப்படுத்துகின்றன. நமது மாநிலத்தை அனைவருக்கும் வாழக்கூடிய மற்றும் வளமான இருப்பிடமாக மாற்றுகின்றன,” என்று சாவ் எடுத்துரைத்தார்.
முன்னதாக, பிறை மக்கள் தொடர்ந்து நம்பிக்கை மற்றும் ஆதரவளித்ததற்காக ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
“ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்ச்சிக்கு கூட்டம் பெருகி வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏனெனில், இது நாம் பகிர்ந்து கொள்ளும் அன்பையும் தொடர்பையும் பிரதிபலிக்கிறது. நான் இங்கே இருக்கும் வரை என்னால் முடிந்ததைச் செய்து சேவை செய்வேன்,” என்று அவர் மனமார்ந்த நன்றியுடன் கூறினார்.
பிறை தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு தாமான் சாய் லெங் பார்க் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்று இந்தியர்களின் பாராம்பரிய உணவு வகைகள், கலை கலாச்சார படைப்புகளைக் கண்டு இன்பூற்றனர்.
பிறை தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ்; அவர்தம் துணைவியார் தான் லீன் கீ, முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ ஈ கின் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதனிடையே, ஆடல் பாடல் என இயல் இசையுடன் திறந்த இல்ல உபசரிப்பு சிறப்பாக நடைபெற்றது. இதனுடன் கலை நிகழ்ச்சியும் நம் நாட்டின் திறன்மிக்க கலைஞர்களின் படைப்புகளும் நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தது. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான தீபாவளிப் பணத்தையும் 2,000 பேருக்கு பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு அவர்தம் துணைவியாரின் பொற்கரத்தால் வழங்கினார்.