பினாங்கு முதல் மாநிலமாக 100 ஸ்மார்ட் திட்டங்கள் செயல்படுத்த இலக்கு – ஜெக்டிப்

டத்தோ கெராமாட் – மாநில அரசு 2018 -இல் உருவாக்கப்பட்ட பினாங்கு2030 இலக்கின் அடிப்படையில் பினாங்கு மாநிலத்தை அனைத்துலக அறிவார்ந்த  மாநிலமாக உருமாற்றம் காண அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இதுவரை, மொத்தம் 73 ஸ்மார்ட் முயற்சிகளில் 33 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு;26 முயற்சிகள் செயல்படுத்தப்பட்டும்;  மேலும் 14 முயற்சிகள் திட்டமிடல் பிரிவில் இடம்பெறுகின்றன. மாநில அரசு 2021 ஆண்டு இறுதிக்குள் 100 ஸ்மார்ட் திட்டங்களை செயல்படுத்தும் முதல் மாநிலமாக திகழ இலக்கு கொண்டுள்ளது.

“பினாங்கு மாநில அரசு நிர்வாகம், உள்கட்டமைப்பு, தரவு மற்றும் மக்கள் என நான்கு பிரதான உந்துதல்களை அடிப்படையாக கொண்டு பினாங்கு மாநில ஸ்மார்ட் திட்டங்களை கையாளுகின்றன. மேலும், இத்திட்டத்தில்  ஐந்து முதன்மை கொள்கைகள் (ஸ்மார்ட் மாநிலம், ஸ்மார்ட் மக்கள், ஸ்மார்ட் சூழல், ஸ்மார்ட் நடமாட்டம் மற்றும் ஸ்மார்ட் பொருளாதாரம்) உள்ளடக்கியுள்ளன.

” பினாங்கு மாநிலத்தை அறிவார்ந்த மாநிலமாக பிரகடனப்படுத்தும் இப்புதிய முயற்சி இந்த ஆண்டு ஜுன் மாதம் அறிமுகப்படுத்தப்படும்,” என வீடமைப்பு, உள்ளூராட்சி, நகர்ப்புற & கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ ஸ்ரீ ஐயப்ப சேவா சமாஜம் மையத்திற்கு வருகையளித்தப்போது இதனை அறிவித்தார்.

பினாங்கு2030 இலக்கு டி3 கருப்பொருளின் கீழ்  ‘நகராட்சி சேவைகள் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைத்தல்’ வாயிலாக அனைத்து மாநில அரசு நிறுவனங்கள் பல்வேறு ஸ்மார்ட் முயற்சிகளை செயல்படுத்த அதன் சேவைகளை மேம்படுத்த உத்வேகம் கொள்கின்றன.

மாநில அரசு செயல்படுத்தும் ஸ்மார்ட் முயற்சிகளில் வரி மற்றும் வருவாயை செலுத்த  பணமற்ற பரிவர்த்தனை; இயங்கலை; மின்-பரிவர்த்தனை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஸ்மார்ட்  சேவைகளின்  வாயிலாக 23 அரசு வருவாய் வசூல் துறைகள் மற்றும் முகவர் நிறுவனங்களிலிருந்து 2021 ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை பினாங்கு மாநிலத்தில் மொத்தம் 217,370 (64.8%) எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளன.

இதற்கிடையில், 2021 பிப்ரவரி மாத முழுவதும் மின்-கட்டணம் மூலம் ரிம104,262,062.02 (50.8%) பரிவர்த்தனைகள் மேற்கொண்டுள்ளன.

பினாங்கு மாநிலம் முழுவதும் செயல்படும் பொதுச் சந்தைகளில் மொத்தம் 1,507 வணிகர்கள் மின் கட்டண முறையை பயன்படுத்தி 172,240 பரிவர்த்தனைகள் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், அத்தினத்தன்று ஸ்ரீ ஐயப்ப சேவா சமாஜம் ஏற்பாட்டில் 50 தனித்து வாழும் தாய்மார்களுக்கு பரிசுக்கூடைகளை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் எடுத்து வழங்கினார்.

பினாங்கு மாநிலத்தை அனைத்துலக ரீதியில் அறிவார்ந்த நகரமாக மெய்ப்பிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.