தேர்தல் பிரச்சாரக் குழுவின் ஆதரவு மற்றும் பங்களிப்புக்கு நன்றி – சாவ்

பிறை – 15வது பொதுத் தேர்தலில் பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் மகத்தான வெற்றியை உறுதிசெய்ய 24 மணி நேரமும் உழைத்த தனது பிரச்சாரக் குழுவிற்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கொன் இயோவ் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

தனது பிரச்சாரக் குழுவினர் பத்து காவானில் உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற பிரச்சாரக் காலம் தொடங்கியதில் இருந்து அயராது அவரைப் பின்தொடர்ந்து வருவதாக மாநில முதல்வருமான சாவ் கூறினார்.

“பிறை, புக்கிட் தெங்கா மற்றும் புக்கிட் தம்புன் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் பொது மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து மேலும் அறிய நாங்கள் முடிந்தவரை பல இடங்களுக்குச் சென்றுள்ளோம்.

மேலும், எனக்கு ஆதரவு அளித்த தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கும் எனது நன்றியைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

“இந்த 14 நாட்கள் நடைபெற்ற பிரச்சாரத்தில் என்னுடன் ஒன்றிணைந்து ஆதரவு அளித்த பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள மூன்று சட்டமன்ற உறுப்பினர்களான இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி(பிறை), கூய் சியோவ்-லியோங் (புக்கிட் தெங்கா) மற்றும் கோ சூன் அய்க் (புக்கிட் தம்புன்)
ஆகியோருக்கும் நன்றித் தெரிவிக்க விரும்புகிறேன்.

“உங்கள் அனைவரின் உதவி மற்றும் ஒத்துழைப்பு இன்றி, என்னால் பத்து காவான் தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்க முடியாது. எனவே, உங்கள் கடின உழைப்புக்கும் உங்கள் அர்ப்பணிப்புக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று இன்று செபராங் ஜெயாவில் உள்ள தி லைட் தங்கும்விடுதியில் நடந்த பாராட்டு விருந்தோம்பலின் போது சாவ் தனது உரையில் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி மற்றும் பத்து காவான் பக்காத்தான் ஹராப்பான் பிரச்சார இயக்குனருமான டேவிட் மார்ஷலும் கலந்து கொண்டார்.

15வது பொதுத் தேர்தலில் முதல்வரின் மகத்தான வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்த பாராட்டு விருந்தோம்பல் நடத்தப்பட்டது.

பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான சாவ், 50,744 வாக்குகள் பெற்று பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதிக்கான போட்டியில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார்.

சாவ் தனது போட்டியாளர்களான லீ ஆ லியோங் (மலேசிய மக்கள் கட்சி), தான் லீ ஹுவாட் (தேசிய முன்னணி), வோங் சியா ஜென் (தேசிய கூட்டணி) மற்றும் ஓங் சின் வென் (வாரிசன்) ஆகியோரை 40,400 பெரும்பான்மையுடன் தோற்கடித்தார்.

வோங் 10,344 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார், தான் 7,145 வாக்குகளைப் பெற்றார். ஓங் மற்றும் லீ முறையே 450 மற்றும் 148 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

இத்தொகுதியில் எதிர்நோக்கும் போக்குவரத்து நெரிசல், வெள்ளப் பிரச்சனை மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண்பதில் தன்னால் முடிந்ததைச் செய்ய இணக்கம் கொள்வதாக பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனது உறுதிப்பாட்டை சாவ் மீண்டும் வெளிப்படுத்தினார்.

பத்து காவான் நாடாளுமன்ற சேவை மையம், பத்து காவான் தொகுதியின் மையமாக திகழும் சிம்பாங் அம்பாட் எனும் இடத்தில் திறக்கப்படும் என்றும் சாவ் அறிவித்தார்.