பிறை எம்.பி.கே.கே ஆதரவில் இலவச கைத்தொழில் பயிற்சி பட்டறை

Admin
rajoo 1

பிறை – “தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெண்களுக்கு அதிகாரமளிப்பது மிக அவசியமாகும்.

“பெண்களின் முன்னேற்றத்திற்கு மாநில அரசாங்கம் பல ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் சுயதொழில் பட்டறை, வேலை வாய்ப்பு, தன்னம்பிக்கை கருத்தரங்கு ஆகியவை நடத்தப்படுகிறது.

மறுசுழற்சி பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்கள் மற்றும் உலர் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி பட்டறை பட்டமளிப்பு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு இவ்வாறு கூறினார்.

பிறை கம்போங் சமூக மேலாண்மை கழகம் (எம்.பி.கே.கே) ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இப்பயிற்சி பட்டறை 10 வாரங்களுக்கு நடத்தப்பட்டது. இந்தப் பட்டறையில் பி40 குழுவை சேர்ந்த 20 இளையோர் மற்றும் குடும்ப மாதர்கள் கலந்து பயன்பெற்றனர். இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலும் பிறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சுந்தராஜு கூறினார்.

இந்தப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு தேர்ச்சிப் பெற்ற 20 பங்கேற்பாளர்களுக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜு நற்சான்றிதழ் எடுத்து வழங்கினார்.

மேலும், இந்தப் பட்டறை சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய பிறை சட்டமன்ற சேவை மையம், பிறை குடும்ப மற்றும் மகளிர் மேம்பாட்டு செயற்குழு (JPWK) மற்றும் எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் பொன்னுதுரை ஆகியோருக்கும் பிறை எம்.பி.கே.கே தலைவரும் இப்பயிற்சி பட்டறையின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஶ்ரீ சங்கர் தெரிவித்தார்.

இந்தப் பயிற்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை மணி 4.00 வரை என 10 வாரங்களுக்கு நடத்தப்பட்டன. மேலும், பி40 குழுவை இலக்காக கொண்டு முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டது.

மேலும், இந்தப் பட்டறையில் மறுசுழற்சிப் பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்களைத் தயாரித்தல் உதாரணமாக கூடை, சாவி கொத்து, புகைப்பட பிரேம்கள் என குறைந்த மூலதனம் கொண்டு பொருட்கள் தயாரிக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதேவேளையில், உலர் பொருட்களைத் தயாரித்தல் பயிற்சி பட்டறையில் முறுக்கு, வேர்க்கடலை, ரொட்டி வகைகள் என பல உணவுப் பொருட்கள் தயாரிக்கவும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

இந்தப் பட்டறையில் பங்கேற்பாளர்களுக்கு கைவினைப் பொருட்கள் மற்றும் உலர் பொருட்களைத் தயாரிக்கும் வழிமுறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டதோடு பயிற்சியும் வழங்கப்பட்டது. அவர்களே அதனை சுயமாக தயாரிக்க ஊக்கமளிக்கப்பட்டது, என ஶ்ரீ சங்கர் கூறினார்.

பங்கேற்பாளர்களுக்கு மலேசிய நிறுவனங்கள் ஆணையம் (எஸ்.எஸ்.எம்) கீழ் பதிவு செய்வதற்கும் வழிகாட்டப்பட்டது. அதோடு, அவர்களின் சுயதொழில் பொருட்களை சமூக வலைத்தலங்களில் விளம்பரம் செய்யவும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் வியாபாரத் துறையில் ஈடுபடுவதற்கும் அவர்களின் கைவினைப் பொருட்கள் மற்றும் உலர் பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கத்தில் கூடிய விரைவில் பிறை எம்.பி.கே.கே ஏற்பாட்டில் விற்பனை சந்தை நடத்த திட்டமிடுவதாக அதன் தலைவர் ஶ்ரீ சங்கர் கூறினார்.

அண்மையில், முத்துச் செய்திகள் நாளிதழ் குழுவினர் இந்தப் பட்டறையில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களை நேர்காணல் செய்தனர். உணவு தயாரிக்கும் துறையில் ஆர்வம் கொண்ட திருமதி திலகவதி முனியாண்டி இப்பட்டறை மூலம் வியாபார நுட்பங்கள் கற்றுக் கொண்டு வியாபாரத் துறையில் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது, என்றார்.

மேலும், பத்தாண்டு சிறு கேத்தரிங், பதனிடப்பட்ட உணவு பதார்த்தங்கள் (கரி பாப், இட்லி மற்றும் பல) போன்ற சிறு தொழிலில் ஈடுப்பட்டிருந்தாலும் அதனை மேம்படுத்த இந்தப் பட்டறை சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது என குடும்ப மாது குறிப்பிட்டார்.

இதனிடையே, மூன்று பிள்ளைகளுக்குத் தயாரான திருமதி புவனேஸ்வரி சுப்பையா இந்தப் பட்டறை வாயிலாக பச்சை கச்சான் மற்றும் முறுக்கு தயாரிக்கும் வியாபாரத் துறையில் ஈடுப்பட்டார்.
“இங்கு முறையாக வியாபாரம் செய்யும் வழிமுறைகள் கற்றுக் கொண்டு எனது பொருட்களை சந்தைப்படுத்தவும் வியாபாரத்தை பெருக்கவும் வழிவகுத்துள்ளது, என்றார்.

rajoo 2
பங்கேற்பாளர்கள் உலர் பொருட்களைத் தயாரிக்கும் முறைகளை கற்றுக் கொள்வதைப் படத்தில் காணலாம்.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளும் வருமானத்தை அதிகரிக்க விரும்பும் குடும்ப மாதுவும் இம்மாதிரியான பட்டறைகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, பகுதி நேர சிகையலங்கார நிபுணராக பணிப்புரியும் திருமதி தினேஸ்வரி நாச்சி இப்பட்டறையில் கலந்து கொண்ட பின்னர் கேக், கேண்டி போன்ற உணவு பதார்த்தங்களை செய்து விற்க தொடங்கியுள்ளார். சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வியபாரம் தற்போது நண்பர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது என கூறினார்.

rajoo 3
இந்தப் பட்டறையில் பங்கேற்ற திருமதி புவனேஸ்வரி சுப்பையா, திருமதி திலகவதி முனியாண்டி மற்றும் திருமதி தினேஸ்வரி நாச்சி (இடமிருந்து வலம்).

கூடிய விரைவில் சமூக ஊடகங்கள் வாயிலாக சந்தைப்படுத்தி வியாபாரத்தை பெருக்க இணக்கம் கொண்டுள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

rajoo4
மறுசுழற்சி பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களைப் படத்தில் காணலாம்.