பொங்கல் விழா பொது மக்களிடையே ஒற்றுமையை நிலைநிறுத்துகிறது – அமர்

சுங்கை பாக்காப் -ஒவ்வொரு ஆண்டும் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பதற்கு ஏற்ப இந்தியர்கள் தை மாதத்தை இன்முகத்துடன் வரவேற்பர். உலக வாழ் தமிழர்களும் தை முதல் நாளை பொங்கல் தினமாக மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். இவ்விழா போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து கொண்டாடுகின்றனர். அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள் மட்டுமின்றி கல்வி மையங்களிலும் இந்த தைப்பொங்கலை பிரமாண்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அமர் பிரித்பால் பொங்கல் பானையில் அரிசிப் போடுகிறார்.

அவ்வகையில் சுங்கை பாக்காப் சட்டமன்றம், நிபோங் திபால் நாடாளுமன்றம் மற்றும் கெபாலா காஜா சமூக நிர்வாக மையம் இணைந்து தைப்பொங்கல் கலை இரவை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடினர்.
மூன்று கரும்புகள் பிரமிட் வடிவில் கட்டப்பட்டு, அதற்கு நடுவில் விறகுகளுக்கு இடையில் அடுக்கி வைக்கப்பட்ட செங்கற்களின் மேல் அலங்கரிக்கப்பட்ட மண் சட்டி வைக்கப்பட்டிருந்தது. சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அமர் பிரித்திபால் மண் சட்டியில் பால் ஊற்றி பொங்கல் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

“பொங்கல் விழா தமிழர் திருநாளாக அணுசரிக்கப்படுகிறது. அதுமட்டிமின்றி இவ்விழாவில் பிற இன மக்களும் கலந்து கொண்டு பொங்கல் வைப்பது நம் மாநிலத்தின் ஒற்றுமையைப் புலப்படுத்துகிறது,” என டாக்டர் அமர் பிரித்பால் வரவேற்புரையில் கூறினார்.

இக்கொண்டாட்டத்தில் உறி அடித்தல், சறுக்கு மரம் ஏறுதல், வர்ணம் தீட்டும் போட்டி மற்றும் கோலம் போடும் போட்டு ஏற்பாடுச் செய்யப்பட்டன. பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன்
மாலை மணி 4.00-க்கு தொடங்கப்பட்ட இவ்விழா ஆடல் பாடல் என அற்புதமான கலை நிகழ்ச்சியுடன் நிறைவை நாடியது.