ஜார்ச்டவுன் – பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) அறிமுகப்படுத்தியுள்ள ‘மருத்துவமனை CAT’ (Hospital CAT) பேருந்து சேவை, பொதுமக்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி இந்தச் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து முதல் ஆறு மாதங்களிலேயே, இதைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், சுகாதார சேவைகளை பொதுமக்கள் எளிதில் அணுகும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், பாலின உணர்திறன் கொண்ட வரவு-செலவுத் திட்டமிடல் (GRPB) கட்டமைப்பின் கீழ் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டதாக எம்.பி.பி.பி இன் பொறியியல் துறை இயக்குநர் சியா சின் கூய் தெரிவித்தார்.
மருத்துவமனைகளுக்குச் செல்ல பொதுப் பேருந்து சேவைகள் தொடர்பான மக்களின் தேவையை அறியும் வகையில், பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் (PWDC) இணைந்து கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே ‘மருத்துவமனை CAT’ பேருந்து சேவை செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த ஆய்வின் அடிப்படையில், மருத்துவமனைகளுக்குச் செல்லும் பொதுப் பேருந்து சேவைகளுக்கு மக்களிடையே அதிக தேவை இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தற்போது மேற்கொண்டு வரும் விரிவாக்கப் பணிகளால் வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள பினாங்கு மருத்துவமனைக்கு (HPP) இந்தச் சேவை மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.
“இந்த ஆய்வின் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், கொம்தாரிலிருந்து பினாங்கு மருத்துவமனை வரை நேரடி பேருந்து வழித்தடம் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

“அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், ‘மருத்துவமனை CAT’ பேருந்து சேவையை செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு வழங்க, எம்.பி.பி.பி கடந்த ஆண்டு முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இச்சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது,” என்று அவர் கொம்தார் பேருந்து நிலையம் அருகாமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பினாங்கு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கோ ஹின் குவாங், பினாங்கு மருத்துவமனை வருகையாளர்கள் வாரியக் குழுத் தலைவர் டத்தோ தாய் லியோங் செங், பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக (PWDC) தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஓங் பீ லெங், HPP துணை இயக்குநர் (மேலாண்மை) வோங் செங் யூ, எம்.பி.பி.பி போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்து பொறியியலாளர் (2) துதி அஸ்மாலியா அஸாய், மற்றும் ரேபிட் பேருந்து சென். பெர்ஹாட் வடக்கு மண்டலத் தலைவர் முகமது அமீர் அப்துல் ஹலீம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து பேசிய சின் கூய், எட்டு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடத்தில் தற்போது மூன்று பேருந்துகள், 20 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சை பெறுவதற்கோ அல்லது பிற தேவைகளுக்காகச் செல்வோருக்கோ, மருத்துவமனை CAT பேருந்து சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போது, தினமும் மூன்று பேருந்துகள் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை, அரசு விடுமுறை நாட்கள் உட்பட, மொத்தம் 39 பயணங்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தப் பேருந்து வழித்தடம் பினாங்கு மருத்துவமனை (HPP) மட்டுமின்றி, லோ குவான் லாய் (Loh Guan Lye) மருத்துவமனை, ஜாலான் மெக்கலிஸ்டர், சுகாதார கிளினிக் மற்றும் ஐலண்ட் (Island) மருத்துவமனை ஆகியவற்றையும் இணைப்பதால், பொதுமக்கள் மருத்துவச் சேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தொடக்கத்தில், நாளொன்றுக்கு சுமார் 300 பயணிகள் மட்டுமே இச்சேவையைப் பயன்படுத்தினர். தற்போது அந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து, நாளொன்றுக்கு சுமார் 600 பயணிகளாக உயர்ந்துள்ளது.
மேலும், ‘மருத்துவமனை CAT’ பேருந்து சேவைக்கான முழு நிதியுதவியையும் எம்.பி.பி.பி வழங்கி வருவதாக சின் கூய் தெரிவித்தார். இந்தச் சேவையை இயக்குவதற்கான ஆண்டு செலவு சுமார் ரிம900,000 ஆகும். சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தொடர்ந்து இதன் பயனைப் பெறும் வகையில் இச்சேவை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.”
இதற்கிடையில், மாற்றுத்திறனாளிகள் (OKU) உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த இலவசப் பேருந்து சேவையை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தேவையான ஒத்துழைப்பையும் வசதிகளையும் பினாங்கு மருத்துவமனை (HPP) தொடர்ந்து வழங்கும் என்று அதன் இயக்குநர் டாக்டர் ஹின் குவாங் தெரிவித்தார்.