மலேசியர்கள் ஒன்றிணைந்து அனைத்து பண்டிகைகளையும் கொண்டாட வேண்டும் – கிறிஸ்டோபர் லீ

ஜோர்ச்டவுன் – “ இந்நாட்டில் அனைவரும் பல்லின மக்களின் பண்டிகைகளை ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும். யார் அல்லது எங்கிருந்து வந்தோம் என்ற பாரபட்சம் பார்க்காமல் மலேசியர்களாக அனைத்து பண்டிகைகளையும் விமரிசையாகக் கொண்டாட வேண்டும்,” என புலாவ் திக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்டோபர் லீ சுன் கிட் வலியுறுத்தினார்.

மலேசிய இந்து சங்கம் புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை மற்றும் புலாவ் திக்கூஸ் சட்டமன்ற சேவை மன்ற ஒருங்கிணைப்புடன் முதல் முறையாக தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு அஸாத் தமிழ்ப்பள்ளியில் இனிதே நடைபெற்றது.

தீபத் திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 20 வசதி குறைந்த குடும்பங்களுக்கு தீபாவளி பரிசுக்கூடை வழங்கப்பட்டன. மேலும், ஷான் குழந்தைகள் காப்பகம் மற்றும் இராமகிருஷ்ணா ஆசிரமத்தை சார்ந்த 50 பிள்ளைகளுக்கும் தீபாவளி அன்பளிப்பாக பணம் மற்றும் பரிசுக்கூடை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மலேசிய பினாங்கு இந்து சங்கத் தலைவர் முனியாண்டி, கெபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் ஒங்,

மாநகர் கழக உறுப்பினர் காளியப்பன், அஸாத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை கோகிலம்மாள், பினாங்கு இந்து சங்க சமூகநலப் பிரிவின் தலைவர் தொண்டர்மணி முனிசரன், புக்கிட் பெண்டேரா பேரவையின் தலைவர் விவேக நாயகன் தர்மன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியர்களின் கலாச்சாரத்தைப் பறைச்சாற்றும் வகையில் முறுக்கு சுடுதல் மற்றும் மருதானி வரைதல் ஆகியப் போட்டிகள் ஆதரவற்ற குழந்தைகளுக்காகப் பிரத்தியேகமாக நடத்தப்பட்டன. மேலும், இக்கொண்டாட்டத்தை மெருகூட்டும் வகையில் சிலம்பம் மற்றும் பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன. இந்நிகழ்விற்கு வருகையளித்த 200 விருந்தினருக்கும் வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டன.