மாநில அரசாங்கம் இந்தியர்களின் கல்வி, சமூகநலத் திட்டங்களுக்கு முன்னுரிமை – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – பினங்கு மாநில அரசாங்கம் இந்தியர்களின் கல்வி, சமூகநலன், பொருளாதாரம் என அனைத்து கூறுகளிலும் கவனம் செலுத்தி உதவிக்கரம் நீட்டி வருகிறது.

பினாங்கில் 29வது தமிழ்ப்பள்ளி அமைக்கும் நோக்கத்தில் பாகான் வட்டாரத்தில் 4 ஏக்கர் நிலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.மேலும், இராராஜி தமிழ்ப்பள்ளிக்கு 2.3 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது.


மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் மாநில அளவிலான பொங்கல் தினக் கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

மாநில அரசாங்கம் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரிம2.0 மில்லியன் மானியம் வழங்குகிறது.

மேலும், மாநில அரசாங்கம், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மூலம் இந்தியர்களின் மேம்பாட்டுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. இந்து அறப்பணி வாரியம் ஆலயம், இடுகாடு, தமிழ்ப்பள்ளி என அதன் வளர்ச்சிக்கு ஊன்றுகோளாகத் திகழ்கிறது. இந்த வாரியம் சிறப்பாக பணியாற்றி வருவதாக முதல்வர் பாராட்டினார்.

பொங்கல் விழா போன்ற பண்டிகை இந்திய சமூகத்தை ஓரங்கே ஒன்றிணைத்து கொண்டாடுவதற்கு வழிவகுக்கிறது. மேலும், பொங்கல் வைத்தல், உறியடித்தல் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் கலந்து கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறை அதனைப் பின்பற்ற துணைபுரிகிறது. ஒவ்வொரு மதத்தின் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் அதற்குரிய தனித்துவத்தைப் பெற்றுள்ளது. எனவே, இளைய தலைமுறை அதனைப் பராமரிக்க வேண்டும், என சாவ் வலியுறுத்தினார்.

மலேசியா நாட்டில் பல்லின மக்களைக் கொண்டிருப்பது அதன் பலத்தைப் பிரதிபலிப்பதோடு இந்நாட்டு குடிமக்கள் பல மொழிகளை அறிந்திருப்பது, பாராட்டக்குரியது.

இந்நிகழ்ச்சியில், மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி; ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர்; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி; இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும், மாநில அரசாங்கம் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு ரிம1.5 மில்லியன் மானியம் வழங்கி இந்தியர்களின் மதம், கல்வி, மருத்துவம் மற்றும் மேம்பாட்டு அம்சங்களை உள்ளடக்கிய பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துகிறது.