மாநில அரசு மக்களுக்குப் போதுமான உணவு விநியோகத்தை உறுதி செய்யும்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு, மாநில மக்களுக்கு உணவுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து போதுமான  மற்றும் சுத்தமான உணவு வழங்குவதை உறுதி செய்வதில்  கவனம் செலுத்துகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பினாங்கு மாநிலத்தின் பணவீக்கம் 2.2 சதவீதம் உயர்வு கண்டதால் இது அவசியமாக கருதுவதாக, மாநில ஆளுநர் துன் டத்தோ ஶ்ரீ உத்தாமா துன் அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக் கூறினார்.

“பொருட்கள் சந்தை ஆய்வு குறித்த உலக வங்கி அறிக்கையில், அதிகரித்து வரும் எரிசக்தி வளங்களின் விலைகள், வளந்து வரும் நாடுகளில்  குறிப்பிடத்தக்க பணவீக்க அபாயத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது. இது விவசாய உள்ளீடுகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

“எனவே, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும்,  பினாங்கு மக்கள் பணவீக்கம் அல்லது கூடுதலானப் பணவீக்க சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

“நமது மாநிலத்தில் பரந்த  விவசாய நிலம் இல்லாவிட்டாலும், குறுகிய காலத்தில் அதிக  விளைச்சலைத் தரும் பயிர் வகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடிகிறது.

“மேலும், விவசாய இடுபொருட்களின் பயன்பாடு, நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கொண்டு நிலத்தைப் பயிரின் ஊடகமாக  பயன்படுத்துவதில்லை.  மாநிலத்தில் பயிர் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்குப் பங்களிக்கிறது,” என்று அவர் தனது தொடக்க உரையில்

14வது பினாங்கு மாநில ஐந்தாம் தவணைக்கான முதலாம் சட்டமன்ற சந்திப்புக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து இவ்வாறு கூறினார். 

மலேசியாவில் அதிக விளைச்சல் தரும் நெல் உற்பத்தி மட்டுமின்றி  கூண்டு மீன் வளர்ப்பிலும் பினாங்கு மாநிலம் முதலிடம் வகிக்கிறது. 2019, 2020 மற்றும் 2021 ஆகிய  மூன்று (3) ஆண்டுகளாக மலேசியாவின் கூண்டு மீன் உற்பத்தித் துறையிலும் அதன் முதன்மை நிலையை நிலைநிறுத்தியுள்ளது.

இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் மாநில சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங்; மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ்; முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது சாக்கியுடின் அப்துல் ரஹ்மான்; இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சமத்துவமான பொருளாதாரத் திட்டத்தின் கீழ் (BAES) ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம்  ரிம944 பெறுவதை உறுதிசெய்கிறது.  2022, மார்ச் மாதம் வரை  1,648 வசதிக் குறைந்த குடும்பத் தலைவர்களுக்கு  மாநில அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.

மாநில அரசு பொது மக்களின் சமூகநலத்தைப் பாதுகாக்கும் வகையில் ‘i-Sejahtera’ திட்டத்தைச் செயல்படுத்துகிறது.  முதியவர்கள், தனித்து வாழும் தாய்மாது, ஊனமுற்றோர், தங்கத் தாய்மாது மற்றும் தங்கக் குழந்தைகள் உட்பட மாநிலத்தின் வளர்ச்சிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்கும்  ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த நிதிப் பங்களிப்பு வழங்கப்படுகிறது.

கடந்த 2017 முதல் செயல்படுத்தப்படும் முத்தியாரா உணவு வங்கி திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டளவில், மொத்தம் 250 டன் உணவுகள் சேமிக்கப்பட்டு 24,962 பெறுநர்கள் பயனடைந்துள்ளனர், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

மலேசிய தகவல் தொடர்பு  பல்லூடக ஆணையத்தின் புள்ளிவிபரம் அடிப்படையில் கோலாலம்பூர் கூட்டரசு மாநிலத்திற்கு அடுத்த நிலையில் தொலைத்தொடர்பு சேவையில் பினாங்கு இரண்டாம் நிலையில்  அங்கீகரிக்கப்படுகிறது.

பினாங்கு2030 இலக்கை அடையும் நோக்கத்தில்  மாநில அரசு சரியான பாதையில் பயணிப்பதை உறுதி செய்வதற்கும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் இருந்து விலகிச் செல்லாமல் இருப்பதற்கும், 3 ஆண்டு கால சாதனை அறிக்கை அட்டையை (2018,மே முதல் 2021,செப்டம்பர் வரை)  அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பினாங்கு2030 இலக்கை அடைவதற்கு சரியான பாதையில் பயணிப்பதை உறுதி செய்கிறது.

கோவிட்-19 தொற்றுநோயின் இக்கட்டான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்  பல்வேறு ஊக்கத்தொகை மற்றும் நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்திய மாண்புமிகு முதல்வரின் தலைமையிலான பினாங்கு மாநில அரசுக்கு பாராட்டுத் தெரிவித்தார். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இலக்கு குழுவிற்கும் பல பிரதான திட்டங்கள் அறிமுகப்படுத்தியது.

மாநில அரசு,  சிறப்பு உதவித் திட்டத்தின் ( பினாங்கில் கோவிட்-19ஐ எதிர்ப்போம்) கீழ் ரிம176.45 மில்லியன் ஒதுக்கீட்டில் பாதிக்கப்பட்ட தரபினருக்கு உதவும் நோக்கில் கடந்த 2020 முதல் 2022 வரை மூன்று (3) கட்டங்களாக  செயல்படுத்தியது. இத்தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களின் சுமை மற்றும்  பொருளாதார துறைகளை மீட்சிப் பெற பல ஆக்கப்பூர்வமானத் திட்டங்களைச் செயல்படுத்தியது.