முதியவர்கள் மற்றும் B40 குழுக்களுக்கு உதவ 14 மேம்பட்ட பிசியோதெரபி இயந்திரங்கள் அறிமுகம்

Admin
img 20260504 wa0058

பட்டர்வொர்த் – மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு சுகாதார சேவையை மேம்படுத்தும் முக்கிய முன்முயற்சி திட்டமாக, மாநிலம் முழுவதும் ரிம2 மில்லியன் மதிப்பில் 14 மேம்பட்ட பிசியோதெரபி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘பிசியோ வேவ்’ (Physio Wave) எனப்படும் இந்த நவீன இயந்திரங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் வழங்கப்பட்டுள்ளதாக பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் அறிவித்தார்.

இந்த நவீன இயந்திரம் பிசியோதெரபியில் முக்கிய பங்காற்றி, குறிப்பாக மூட்டு, பாதம் மற்றும் நடமாட்டம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை வழங்க உதவுகிறது. இதன் மூலம், அவர்களின் உடல் இயக்க திறன் மேம்பட்டு, வாழ்க்கைத் தரம் கணிசமாக உயர்த்தப்படும் என அவர் விளக்கமளித்தார்.

93c09d55 f2d4 4ea1 b2c9 2f791d791f7c

வலியில்லாமல் வாழ்வது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்துகிறது. ஆனால், மக்கள் தொடர்ச்சியான வலியுடன் வாழும்போது, குறிப்பாக அவர்கள் வயதாகும்போது, அது அவர்களின் நடமாட்டம், உற்பத்தித்திறன் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதிக்கிறது,” என்று லிம் குவான் எங் பட்டர்வொர்த் சுகாதார மருத்துவமனையில் அந்த இயந்திரத்தை நன்கொடையாக வழங்கிய போது கூறினார்.

மேலும், திரட்டப்பட்ட ரிம2 மில்லியன் நிதியின் மூலம் இந்த முன்முயற்சி திட்டம் சாத்தியமானது என்றும், பினாங்கு முழுவதும் நிறுவுவதற்காக 14 இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய இது உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் மூலம் ஓர் இயந்திரம் மட்டுமே வாங்க முடிந்திருந்தாலும், இந்த முன்முயற்சி வழி சிகிச்சை சேவைகளை மேலும் பரவலாகவும் எளிதாகவும் மக்கள் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

“ஓர் இயந்திரம் நிச்சயமாகப் போதாது. அதனால்தான், மாநிலம் முழுவதற்கும் 14 இயந்திரங்களை வாங்குவதற்காக எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து நிதித் திரட்டினோம்,” என்று லிம் விளக்கமளித்தார்.

இந்த இயந்திரங்களை வழங்குவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பட்டர்வொர்த் சுகாதார மருத்துவமனையும் ஒன்றாகும். பொதுமக்களின் தேவை அதிகரித்தால், அங்கு கூடுதலாக ஒரு இயந்திரத்தைப் பெறும் வாய்ப்பும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மூத்த குடிமக்களுக்கு இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படும் என்றும், மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு ஓர் அமர்வுக்கு ரிம5 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும், என்றார்.
“தனியார் மருத்துவமனைகளில், ஓர் அமர்வுக்கு ரிம300-க்கும் அதிகமாகச் செலவாகும். இந்தச் சிகிச்சையை பி40 மற்றும் எம்40 பிரிவினருக்கும், குறிப்பாக, இந்தச் செலவை ஏற்க முடியாத மூத்த குடிமக்களுக்கும் கிடைக்கச் செய்ய நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் தெரிரிவித்தார்.

நாட்டிலேயே அதிக முதியோர் மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களில் பினாங்கும் ஒன்று என்றும், அதன் குடியிருப்பாளர்களில் சுமார் 20% பேர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்றம் லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார்.
இதனால், இதுபோன்ற சுகாதார வசதி மேம்பாடு மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன. நமது மூத்த குடிமக்கள் சுறுசுறுப்பாகவும், நடமாடக்கூடியவர்களாகவும், சமூகத்திற்குத் தொடர்ந்து பங்களிக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
“நான் தனிப்பட்ட முறையில் இந்த சிகிச்சையை மேற்கொண்டேன். இது வலி நிறைந்தது, ஆனால் குணமடைய துணைபுரிகிறது. சில நேரங்களில் குணமடைவதற்கு, சிறிதளவு அசௌகரியத்தைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும்,” என்று கூறினார்.
மேலும், மென்மையான திசுக்களில் ஏற்படும் வலியைத் தணிக்கவும், அதன் உணர்திறன் மற்றும் அசௌகரியத்தை குறைக்கவும் இந்த பிசியோதெரபி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது என்று பினாங்கு பிசியோதெரபி துறைத் தலைவர் ஹிசாமி முஸ்தப்பா, தெரிவித்தார்.

“ஓர் அமர்வில் ஓரளவுக்கு வலி குறைந்தாலும், பொதுவாக மூன்று முதல் ஐந்து அமர்வுகள் வரை தொடர்ச்சியான சிகிச்சைகளுக்குப் பிறகே அதன் முழுமையான பயன் அடைய உதவுகிறது என்று ஹிசாமி முஸ்தப்பா கூறினார்.

மேலும், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், முன்னாள் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கியான் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் இசானி உசாயிர் சுபீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.