முதுமைக்கு நட்புறவான பினாங்கு நகர திட்டத்தில் 85% முன்னேற்றம் பதிவு

Admin
e33f7956 bca1 4443 b652 8aa3f917f051

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலம் 2025ஆம் ஆண்டு இறுதிவரை, “முதுமைக்கு நட்புறவான பினாங்கு நகர (AFCPI)” மூலோபாய செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் வியூகங்களில் மொத்தமாக 85 விழுக்காடு முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

பினாங்கு மாநில சட்டமன்றத்தில் வாய்மொழி கேள்விக்கு பதிலளித்த ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம் , உலக சுகாதார அமைப்பு (WHO) வகுத்துள்ள எட்டு முக்கிய துறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்னேற்றம் மதிப்பிடப்பட்டதாக கூறினார்.

“2025ஆம் ஆண்டு இறுதிவரை, WHO-வின் ‘முதுமைக்கு நட்புறவான நகரம்’ கட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில், முக்கிய செயல்திறன் குறியீடுகள் (KPI) மற்றும் சாதனைகள் அடிப்படையில் மொத்த முன்னேற்றம் 85 விழுக்காடாக உள்ளது,” என்றார்.

பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) வெளியிட்ட முன்னேற்ற அறிக்கையின் படி, எட்டு துறைகளிலும் குறிப்பிடத்தக்க சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெளிப்புற இடங்கள் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான துறையில், பூங்காக்கள் மற்றும் பொது இடங்கள் மூத்த குடிமக்களுக்கு உகந்த வகையில் மேம்படுத்தப்பட்டதன் மூலம் 89.3 விழுக்காடு முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில், பேருந்து சேவைகள் மேம்படுத்தப்பட்டதுடன், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்து மானியங்கள் வழங்கப்பட்டதன் மூலம் 88.6 விழுக்காடு முன்னேற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“வீட்டுவசதி பொருத்தமட்டில், பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் மூலம் 100 விழுக்காடு இலக்கு எட்டப்பட்டுள்ளது.

“அதேபோல், சமூக பங்கேற்பு துறையிலும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்பட்டதன் மூலம் 100 விழுக்காடு சாதனை பெறப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

சமூக ஆதரவு மற்றும் சுகாதார சேவைகள் துறையும் முழுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் மூலம் 100 விழுக்காடு முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இன்னும் முன்னேற்றத்தில் உள்ள துறைகளில் மரியாதை மற்றும் சமூக உள்ளடக்கம் (65.7%), குடிமைப் பங்கேற்பு மற்றும் வேலைவாய்ப்பு (70%), தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் (62.9%) ஆகியவை அடங்கும்.

பினாங்கின் இந்த முயற்சிகள் அனைத்துலக அங்கீகாரத்தையும் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“WHO வழங்கும் ‘Completion of Cycle 1’ அங்கீகாரத்தை பினாங்கு அரசு பெற்றுள்ளது. இதன் மூலம் மலேசியாவில் இந்த அங்கீகாரத்தை பெற்ற முதல் ஊராட்சி அமைப்பாக எம்.பி.பி.பி திகழ்கிறது,” என்றார்.

மேலும், பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் (PWDC) , திட்டங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய முக்கிய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

“PWDC, எம்.பி.பி.பி உடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு, மேம்பாட்டு மற்றும் தலையீட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து திறம்பட நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது,” என்றார்.

அத்துடன், அனைத்து துறைகளிலும் காலகட்ட அடிப்படையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு, செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

“அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் பலவீனங்கள் தொடர்பாக செயல்படுத்தும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, இரண்டாம் கட்ட மூலோபாய செயல் திட்டத்தில் முன்னுரிமையுடன் சேர்க்கப்படுகின்றன,” என்றும் அவர் தெரிவித்தார்.