மேம்பாட்டாளர்கள் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் கட்டுவதில் இணக்கம் கொள்ள வேண்டும் – ஜெக்டிப்

Admin

மாக் மண்டின் – பினாங்கு மாநில அரசு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் செயல்படுத்த அனைத்து வீடமைப்பு மேம்பாட்டளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மாநில அரசு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் கட்டுவதற்கு ஆர்வமுள்ள மேம்பாட்டாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கும் என உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்புற & கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.

“பினாங்கு வாழ் மக்களுக்கு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் நிர்மாணிப்புதே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த திட்டம் அதற்கு சான்றாகத் திகழ்கிறது,” என ஜெக்டிப் தி பார்க் @ மேக் மாண்டின் வீடமைப்பின் நிறைவு மற்றும் இணக்க சான்றிதழ் (சி.சி.சி) ஒப்படைப்பு விழாவில் தனது உரையில் இவ்வாறு கூறினார்.

இத்திட்டத்தை சில்வர் சேனல் சென்.பெர்ஹாட் மேம்பாட்டு நிறுவனம் ஏற்று நடத்தியது. பினாங்கு அரசு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் கட்டுவது மட்டுமின்றி அவ்வீட்டின் நிலைப்பாடு வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக அமைவதற்கு முன்னுரிமை அளிக்கிறது என்று ஜெக்டிப் கூறினார்.

தற்போது பினாங்கில் மொத்தமாக 103,721 வீடுகள் கட்டப்பட்டுள்ளன, கட்டப்பட்டு வருகின்றன, இன்றுவரை பினாங்கில் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன என்றார்.

“நாட்டின் பொருளாதார நெருக்கடியில் தனியார் வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனங்கள் வீடுகள் விற்பனை செய்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே, வீடமைப்பு நிறுவனங்கள் மாநில அரசாங்கத்துடன் கைக்கோர்த்து அதிகமான வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் நிர்மாணிப்பதன் மூலம் வருத்தமளிக்கும் அவல நிலை ஏற்படாது. இதற்குச் சான்றாக தி பார்க்@ மாக் மண்டின் வீடமைப்புத் திட்டத்தில் 100 விழுக்காடு வீடுகள் விற்கப்பட்டுள்ளன,”என்றார்.

ஜெக்டிப் கூறுகையில், வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் ரிம1 மில்லியன் அல்லது ரிம1.5 மில்லியன் வரையிலான விலையில் வீடுகள் நிர்மாணிப்பது அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் எடுக்கப்படும் முடிவாகும் என்றார்.

அதேவேளையில், மேம்பாட்டாளர்கள் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை கட்டி விற்க முடியாத நிலை ஏற்படும் போது, இது மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் என்பதால் மாநில அரசு இத்திட்டத்தில் பங்கெடுத்து விற்க அழுத்தம் கொடுக்கும் என விளக்கமளித்தார்.

இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் மாநில அரசு அப்பகுதியில் புறம்போக்கு நில வீட்டு உரிமையாளர்களுக்கு முறையான மற்றும் பாதுகாப்பான வீடுகள் வழங்குவதோடு, அடுத்த தலைமுறையினருக்கு சொந்த வீடுகள் பெற்றிருப்பதை சாத்தியமாகிறது.

“10 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட தி பார்க் @ மாக் மண்டின் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்பில் ஒவ்வொரு வீடும் ரிம247,000 மட்டுமே விற்கப்பட்டது, அதேவேளையில் இக்குடியிருப்பில் ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம், இணைய இணைப்பு வசதி, பாதுகாப்பு வசதி என பல பொது வசதிகளுடன் நிறுவப்பட்டுள்ளன.