எவரெஸ்ட் இரவியுடன் ஒரு பயணம்

Admin

கெபுன் பூங்கா – மலையேற விரும்புவோருக்கு, உலகின் புகழ்பெற்ற மலையேறுபவர்களில் ஒருவரைச் சந்தித்து அவருடன் இணைந்து மலையேறக் கற்றுக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என்பது மறுப்பதற்கு இல்லை!

கடந்த மார்ச்,25 அன்று போட்டானிக்கல் கார்டனில் டி.இரவிச்சந்திரனுடன்
‘எவரெஸ்ட் இரவியுடன் ஒரு பயணம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 130 க்கும் மேற்பட்ட மலையேறுபவர்களுக்கும் அந்தக் கனவு நனவாகியது.

போட்டனிக்கல் கார்டன் மலையேறும் நடவடிக்கையில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் பெற்ற பதக்கங்களைக் காண்பிக்கின்றனர்.

தினந்தோறும் நெருப்புடன் விளையாடுவது போல் வாழ்க்கையை நடத்தும் இரவிச்சந்திரனைப் போல உறுதியும், ஆர்வமும், குறிக்கோளும் கொண்ட ஒருவருடன் ஒன்றிணைந்து மலையேறச் செல்வது எளிதான காரியம் அல்ல.

எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை வெல்வது மற்றும் பாகிஸ்தானில் உள்ள K2 என்ற உலகின் இரண்டாவது உயரமான சிகரத்தை ஏறியது உட்பட இரவிச்சந்திரன் பல சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளார்.

இரவிச்சந்திரன், ‘வானமே எல்லை’ என்ற பழமொழியின் அடையாளமாகத் திகழ்கிறார்.

அண்மையில் மார்ச் 23 முதல் 25 வரை பினாங்கு மாநிலத்திற்கு அவர் வருகை மேற்கொண்ட போது, சிகரம் அட்வென்ச்சர் கழகம் எனும் அரசு சாரா நிறுவனம் பல நிகழ்ச்சிகளை ஏற்று நடத்தியது.

அவ்வகையில், இரவிச்சந்திரன் அவர்களின் மலையேறும் யுத்திகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் பொது மக்களுக்குப் பிரத்தியேகமாக டிஜிட்டல் நூல்நிலையத்தில் ‘Zero to Hero’ எனும் பட்டறை நடத்தப்பட்டது. அதோடு ‘எவரெஸ்ட் இரவியுடன் ஒரு பயணம்’ என்ற மலையேறும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இரவிச்சந்திரன் மலை ஏறும் வீரராக தனது கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கிய தருணத்தில் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

எவரெஸ்ட் இரவிவுடன் மலையேறும் பட்டறையில் கலந்துகொண்ட பலரில், இளம் பங்கேற்பாளராக
நான்கு வயது நிரம்பிய எஸ்.சிவரஞ்சினியும் கலந்து கொண்டார்.

அன்றைய தினம் பங்கேற்பாளர்கள் எவரஸ்ட் இரவியுடன் மலையேறும் பயணம் தொடங்குவதற்கு முன்பு, அவர் ஓர் உற்சாகமான உரையை நிகழ்த்தினார். அதில் அவர் ஒரு பயணத்திற்கான சரியான திட்டமிடலின் முக்கியத்துவம்; பயணம் முழுவதும் தேவையானக் காலணிகள் மற்றும் தேவையானச் சாதனங்கள் எடுத்துக் கொள்வது; மற்றும் மிக முக்கியமாக, நேரத்தை முறையாகப் பின்பற்றுவது அவசியமாகும், என்றார்.

பொதுவாகவே, மலை ஏறும் முன்பு அதற்குத் தேவையான முழுமையானப் பொருட்கள் மற்றும் சாதனங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம், வழியில் ஏதேனும் அவசரநிலை ஏற்படும் போது முதலுதவி பெற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, மலையேறும் போது குழுத் தலைவர் வழிகாட்டலுக்கு இணங்கி செயல்படுவது மிக அவசியம் என வலியுறுத்தினார்.

மேலும் மலையேறும் பயணத்தின் போது, இரவிச்சந்திரன் மற்ற தலைப்புகள் ஒட்டியும் கலந்துரையாடினார். குறிப்பாக உடற்பயிற்சி செய்வது மற்றும் உடலைக் கட்டுகோப்பாக வைத்திருப்பது முக்கிய கூறாகக் கருதப்படுகிறது என தெரிவித்துக் கொண்டார்.

எனவே, மூன்று கி.மீ கூடுதலான மலையேறும் நடவடிக்கையில், பொது மக்களுக்கு ஒரு வேடிக்கை நிறைந்த மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற்றிருப்பர் என்பது திண்ணம். ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் அவர்களின் முயற்சி, நேரம் மற்றும் பங்கேற்பை அங்கீகரிக்கும் வகையில் அனைவருக்கும் ஒரு பதக்கம் வழங்கப்பட்டது.

இது ஒரு சிறந்த நிறைவு விழாவாக அமைந்தது.