விளையாட்டுத் துறையில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு வெகுமதி- முதல்வர்

Admin
மாநில அரசின் ஸ்கிமாஸ் வெகுமதி பெற்றுக்கொண்ட விளையாட்டு வீரர்களுடன் மாநில முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள்

ஜார்ச்டவுன் மாநில அரசு உள்நாட்டு மற்றும் அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த சாதனைப் படைத்த பினாங்கு மாநில விளையாட்டு வீரர்களுக்கு பினாங்கு மாநில சிறந்த விளையாட்டு ஊக்கத்தொகை திட்டத்தின் (ஸ்கிமாஸ்) கீழ் வெகுமதி வழங்கப்பட்டது.

சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்தி நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களைக் கெளரவிக்கும் நிகழ்வினில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவுடன் இணைந்து இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ, சுற்றுலா, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கலை ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சுன் இன் மற்றும் பினாங்கு மாநில விளையாட்டு கவுன்சில் (எம்.எஸ்.என்.) இயக்குநர் ஃபிரடெரிக் டான் டெக் அன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இரு பெறுநர்கள் குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 6 முதல் 18 வரை அர்ஜென்டினாவின் புவெனஸ் அயர்ஸில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கோ ஜின் வெய் மகளிர் ஒற்றையர் பூப்பந்து போட்டியிலும் அமிருல் ஹமிசான் (ஹாக்கி குழுவினர்) போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றதற்கு வெகுமதி பெற்றனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜின் வீக்கு ஸ்கிமாஸ் வெகுமதியாக ரிம30,000-ம் மற்றும் முஹம்மது அமிருல் ரிம4,500 பெற்றுக்கொண்டனர்.

மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேராக்கில் நடைபெற்ற 20-வது மலேசியா காது கேளாதோர் விளையாட்டுப் போட்டியில் (சொப்மா) பினாங்கு மாநிலத்தை பிரதிநிதித்து சென்ற பினாங்கு காது கேளாதோர் விளையாட்டு சங்க வீரர்கள் நான்கு தங்கப் பதக்கம், வெள்ளி(7) மற்றும் வெண்கலம்(6) வென்றதை முன்னிட்டு மாநில முதல்வர் வெகுமதியாக ரிம49,500-கான மாதிரி காசோலையை எடுத்து வழங்கினார்.

பினாங்கு உடல் ஊனமுற்றோர் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு சங்கத்தை(பெஸ்ரோன்) சேர்ந்த 19 விளையாட்டு வீரர்கள் பாரா சுக்மா போட்டியில் சாதனைப் படைத்து ரிம103,000-கான வெகுமதியைப் பெற்றுக்கொண்டனர்.

கடந்த 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரை உள்நாட்டு மட்டுமின்றி அனைத்துலக அரங்கில் மாநிலம் மற்றும் நாட்டின் நற்பெயரை நிலைநாட்டிய பினாங்கு விளையாட்டு வீரர்களுக்கு ஸ்கிமாஸ் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் ரிம1,023,800  வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது ,” என முதல்வர் செய்தியாளர் சந்திப்புக்கூட்டத்தில் கூறினார்.