ஜார்ச்டவுன் – ஆவணமற்ற குடியேறிகள் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் குடியிருப்புப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் தங்கியிருப்பது தொடர்பாகப் பொதுமக்கள் எழுப்பும் புகார்களுக்குத் தீர்வு காண, மாநில அரசுத் துறைகள், உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளை உள்ளடக்கிய முறையான ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் வலியுறுத்தியுள்ளார்.
பினாங்கு மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பேசிய அவர், குடியிருப்புப் பகுதிகளில் நிலவும் அதிக நெரிசல், சுகாதாரச் சீர்கேடு, பொதுவசதிகளின் பயன்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஹம்னா அடுக்குமாடி, புக்கிட் ஜம்புல் மற்றும் மிண்டன் ஹைட்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள், வீடுகளில் அதிக எண்ணிக்கையிலானோர் தங்கியிருப்பது, சுற்றுப்புறத் தூய்மை பாதிக்கப்படுவது மற்றும் உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து புகார் அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
குடியேற்றம், வெளிநாட்டினர் கட்டுப்பாடு மற்றும் அகதி அந்தஸ்து தொடர்பான அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் இருந்தாலும், இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கோரி பொதுமக்கள் முதலில் தங்களது தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களையே அணுகுவதாகவும், இதனால் மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஆவணமற்ற குடியேறிகள் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் குடியிருப்புப் பகுதிகளில் அதிகரித்து வருவது குறித்து பொதுமக்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள், புலன செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் புகார்கள் கிடைக்கின்றன,” என்றார்.
இப்பிரச்சனைகளைக் கையாள்வதில் ஒருங்கிணைப்பையும் அமலாக்க நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் வகையில், குடிநுழைவுத் துறை, மலேசிய அரசு காவல்துறை, பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி), செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைப்புகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புத் தளத்தை மாநில அரசு உருவாக்க வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.
குறிப்பாக, அதிக நெரிசல் மற்றும் வீட்டு வசதி விதிமுறைகளை மீறும் சம்பவங்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில், வெளிநாட்டினர் குடியிருப்புகள் தொடர்பான புகார்களை விரைவாகவும் திறம்படவும் கையாள இத்தகைய அமைப்பு உதவும், என்றார்.
மேலும், பினாங்கில் மேற்கொள்ளப்படும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து மாநில அரசு அறிக்கைகளைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அந்த அறிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை, ஆவணமற்ற குடியேறிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கைதுகள் மற்றும் அவற்றைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் இடம்பெற வேண்டும் என்றார்.
“இதன் மூலம், மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ளூர் சமூகத்தினருக்கும் துல்லியமான தகவல்களை வழங்க முடியும்,” என்றார்.
அதேவேளையில், ஆவணமற்ற குடியேறிகள், முறையான ஆவணங்களைக் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் ஆகியோருக்கு இடையிலான வேறுபாடுகளைத் தெளிவாக அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஒருவரின் தேசியம் அல்லது பின்னணியை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், சட்டம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“வெளிநாட்டினர் அனைவரும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அல்ல. இருப்பினும், பாதுகாப்பான, தூய்மையான மற்றும் ஒழுங்கான சூழலில் வாழ்வதற்கான உள்ளூர் மக்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றார்.
இந்த விவகாரத்தை எழுப்புவதன் நோக்கம் எந்தவொரு சமூகத்திற்கும் எதிரான எதிர்மறையான உணர்வுகளைத் தூண்டுவதல்ல என்றும், மாறாக பொதுமக்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பது, சட்டங்கள் பாரபட்சமின்றி அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வது மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதே என்றும் அவர் வலியுறுத்தினார்.